="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

12 பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்

முந்தைய நாள் முழுவதும் பயணம் செய்து சில சிறப்பான அனுபவங்களைப் பெற்று நித்ராதேவியின் மடியில் துயிலுறங்கியது பற்றி சென்ற பகுதிகளில் பார்த்தோம். இங்கே ஒரு விஷயத்தினை உங்களுக்கும் மீண்டும் நினைவு படுத்த நினைக்கிறேன் – நாங்கள் இப்பயணத்தினை மேற்கொண்டது நல்ல குளிர் நாட்களான டிசம்பர் மாத இறுதியில். அதுவும் குளிர் பிரதேசமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் குளிருக்குக் கேட்கவா வேண்டும்?

 

குளிர் இருந்தாலும், இங்கே கிடைக்கக்கூடிய ”ரஜாய்” எனும் பஞ்சு மெத்தையை உடலுக்கு மூடிக்கொண்டால் குளிர் அவ்வளவாக தெரியாது. உள்ளே நுழைந்து கொள்ளும் வரை தான் குளிர். கொஞ்சம் அதனுள் அடங்கிவிட்டால், வெளியே வர மனமிருக்காது! இருந்தாலும், நல்ல உறக்கத்திற்குப் பிறகு அதிகாலை 05.00 மணிக்கே நான் எழுந்து சுடு தண்ணீரில் குளித்துவிட்டேன். பிறகு மற்றவர்கள் தயாராவதற்குள் அப்படியே காலாற நடந்து வருவோம் என வெளியே வந்தேன்.

 

அந்தக் காலை நேரத்திலும் காங்க்டா நகரில் மக்கள் கொஞ்சம் வெளியே வந்து, கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். காலை நேர தரிசனத்திற்குச் செல்கிறார்கள். விடிகாலையிலேயே குளித்து பக்தியுடன் காங்க்டா நகரில் குடிகொண்டிருக்கும் தேவியை தரிசனம் செய்து பக்தியில் திளைக்கிறார்கள். அன்னையை தரிசிக்கும் முன்னர் அவர்களை தரிசித்து அவர்கள் புண்ணியத்தில் நானும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன்! சற்றே நடந்து தங்குமிடத்திற்குத் திரும்பினேன்.

 

அதற்குள் சிலர் தயாராகிக் கொண்டிருக்க, தங்குமிடத்தின் மொட்டை மாடியிலிருந்து காமிராவிற்கு நல்ல தீனி கிடைக்கும் – சில படங்களை எடுக்கலாம் என்ற எண்ணத்தோடு மேலே சென்றேன். ஆஹா என்ன அற்புதமான காட்சிகள் அங்கே காணக் கிடைத்தன! [dh]தௌலா[dh]தார் ரேஞ்ச் என அழைக்கப் படும் மலை ஒரு புறம், மலைகள் முழுவதும் ஆங்காங்கே பனிப்பொழிவு இருக்க, தூரத்திலிருந்து வெள்ளிப் பனிமலையோ இது என்று நினைக்க வைக்கும்படி இருக்க, மற்றொரு புறத்தில் சூரியன் தனது கிரணங்களை வெளிப்படுத்தி மனிதர்களுக்கு அன்றைய காலை வணக்கத்தினைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

பனி மூடிய மலைச் சிகரங்களை பார்க்கும்போதே மனதிற்குள் அப்படி ஒரு குளிர்ச்சி. அந்தக் குளிர்ச்சியை போக்கியபடி சூரியனின் கதிர்கள். ஆஹா அற்புதமான காட்சி தான். கேமராக் கண்களாலும், நேராகவும் பார்த்து சில காட்சிகளைப் படம் பிடித்தும் காலை நேரத்தினை சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தேன்.  என்னைப் போலவே ஒரு குரங்காரும் மாடியின் ஒரு சுவர் ஓரத்தில் உட்கார்ந்து இயற்கை அழகினை ரசித்துக் கொண்டிருந்தார்.

 

பக்கத்தில் இருக்கும் மரம் ஒன்றில் காக்கைகள் அமர்ந்து தங்கள் பங்கிற்கு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன. அமைதியான சூழலில் அப்படியே நின்று கொண்டிருந்தே இருக்கலாம் போல தோன்றியது.  அங்கே அருகே இருந்த ஒரு வீட்டில் மாடியில் தாழ்வாரம் போல ஒரு அமைப்பு. [dh]தௌலா[dh]தார் மலையை நோக்கி சில இருக்கைகள். இரண்டு முதியவர்கள் அங்கே அமர்ந்து காலைப் பொழுதினை ரசித்துக் கொண்டிருந்தார்கள் – ஆஹா என்ன ஒரு சுகம்!

 

இன்னுமொரு பக்கத்தில் பார்த்தால் ஒரு முதியவர் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அவரது ஒரு கையில் சிறிய கிண்ணம். அவர் அருகிலேயே அவர் மனைவி நின்று கொண்டிருக்கிறார். அவர் கையில் வைத்திருப்பது ஒரு சிறிய பிரஷ். அதை வைத்து என்னதான் செய்கிறார் என்று பார்த்தால், பாசமாய் அவரது கணவருக்கு தலைச்சாயம் பூசி விடுகிறார்!

 

இப்படியாக இயற்கை/செயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தபடியே நானும் தயாரான சில நண்பர்களும் இருக்க, மற்றவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.  நண்பர் மனீஷ் காலை சீக்கிரமாகவே வந்து விடுவதாகச் சொல்லி இருக்கிறார். அவருடன் கோவிலுக்குச் செல்வதாக ஒரு திட்டம். கோவிலுக்குச் சென்று அங்கு கிடைத்த அனுபவங்களை அடுத்த பதிவில் சொல்கிறேனே!

 

தொடர்ந்து பயணிப்போம்……

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும் by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.