13 பகுதி 13: காங்க்டா – வஜ்ரேஷ்வரி தேவி

 

 

ஒரு வழியாக அனைவரும் தயாராகி விட நண்பர் மனீஷ்-உம் வந்து சேர்ந்தார். கோவிலுக்குச் செல்ல அனைவரும் புறப்பட்டோம். நாங்கள் தங்கிய இடத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் கோவில் வந்து விடும். அதுவும் ஒரு சிறிய சந்து தான் கோவிலுக்குச் செல்லும் பாதை. அதன் இரு மருங்கிலும் கடைகள் – பூஜைக்குத் தேவையான பொருட்கள் மட்டுமின்றி பல விதமான பொருட்களையும் விற்கும் கடைகள். அவற்றை எல்லாம் பார்த்தபடியே கோவிலை நோக்கி நடந்தோம்.

 

பாதி வழியிலேயே ஆனைமுகத்தோனுக்கு ஒரு சிறிய கோவில் – சிவப்பு வண்ணத்தில் ஆனைமுகத்தோன் – அவனைச் சிறை வைத்து ஒரு அடைப்பு – அவ்வளவு தான் – “என்னை ஏன் சிறை வைத்தாய்?” என்று அவன் யாரிடம் கேட்க முடியும் என்று புரியவில்லை. அவனைத் தொழுது நாங்கள் முன்னேறினோம்.

 

பெரும்பாலான வட இந்தியக் கோவில்களில் காலணிகளை கழற்றி வைக்கவென்று தனியாக இடம் ஏதும் இருப்பதில்லை. கோவில் பாதையில் இருக்கும் அர்ச்சனை தட்டுகள் விற்கும் கடைகளில் விட்டு விடுவார்கள். இங்கே தனியாக ஒரு இடம் இருந்தது. பக்கத்திலேயே கைகளை சுத்தம் செய்து கொள்ள தண்ணீரும். இப்படி ஒரு இடத்தில் காலணிகளை வைத்து விட்டு கோவிலை நோக்கி முன்னெறினோம்.  தேவியை தரிசனம் செய்வதற்கு முன்னர் கோவில் பற்றிய சில விவரங்களைப் பார்க்கலாம்.

 

இந்தப் பயணத்தில் ஏற்கனவே மா சிந்த்பூர்ணி, ஜ்வாலாஜி ஆகிய இரண்டு சக்தி பீடங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று பார்க்கப் போகும் கோவில், பயணத்தில் பார்க்கும் மூன்றாவது சக்தி பீடம். இந்த கோவிலில் சதி தேவியின் இடது மார்பகம் விழுந்ததாக நம்பப் படுகிறது. இங்கே குடிகொண்டிருக்கும் தேவியின் பெயர் வஜ்ரேஷ்வரி தேவி. ஜம்மு வைஷ்ணவதேவி கோவில் போலவே இங்கேயும் தேவியை பிண்டி ரூபத்தில் வழிபடுகிறார்கள்.

 

காங்க்டா தேவி என்று சொல்லப்படும் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலுக்கு நாகர்கோட் [dh]தாம் என்றும் கோட் காங்க்டா என்றும் பெயர்கள் உண்டு. சதி தேவியின் இடது மார்பகம் இந்த இடத்தில் தான் விழுந்தது என்று சொல்வது போலவே வேறு சில கதைகளும் உண்டு. மஹிஷாசுரனை வதைத்த போது வஜ்ரேஷ்வரி தேவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அப்புண்களை குணப்படுத்த அதன் மேலே வெண்ணை தடவிக் கொண்ட்தாகவும் கதை உண்டு. இப்போதும் மகர சங்கராந்தி தினத்தன்று வஜ்ரேஷ்வரி தேவிக்கு வெண்ணைக் காப்பு செய்கிறார்கள்.

 

மிகவும் பழமையான கோவில் என்றாலும் அன்னிய ஆக்கிரமிப்புகளில் பல முறை அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இயற்கையின் சீற்றத்தால் விளைந்த அழிவு தான் மிகப் பெரியது. 4 ஏப்ரல் 1905-ஆம் வருடம் காங்க்டா முழுவதும் அப்படி ஒரு குலுக்கல் – ரிக்டர் ஸ்கேலில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட மிகப் பெரிய அழிவு – 20000 பேருக்கு மேல் உயிரிழக்க, பலத்த காயங்கள் அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில்.  இடிபாடுகளில் விழுந்த வீடுகள் எண்ணிலடங்கா. அழிவில் சிக்கியதில் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலும் ஒன்று.

 

கோவிலை புதுப்பித்து, இப்போது இருக்கும் கோவில் கட்ட கிட்டத்தட்ட  25 வருடங்கள் ஆகியிருக்கின்றது. கோவிலின் கட்டமைப்பு இந்து, இஸ்லாம், சீக்கிய முறைகள் மூன்றையும் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. தேவியின் கோவிலில் படைக்கப்படும் பிரசாதங்கள் எப்போதும் மூன்று பகுதிகளாகப் பிரித்து – மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹா காளி – ஆகிய மூவருக்கும் படைக்கிறார்கள்.

 

கோவிலில் நுழைவாயிலேயே இரண்டு பாதங்கள் – அவற்றிற்கு பூஜை செய்து, பூக்களையும் தூவி வைத்திருக்கிறார்கள். வாயிலில் அழகிய ஓவியங்களும் வரைந்திருப்பதைக் கண்டு ரசித்தபடியே உள்ளே நுழைந்தோம். சில ஓவியங்கள் ஆங்காங்கே சிதிலப்பட்டிருப்பதும் காண முடிந்தது. ஒரு சிவன் சிலையும் அங்கே இருந்தது. அவற்றை எல்லாம் பார்த்தபடியே கோவிலுக்குள் நுழைந்தோம். தேவியின் கருவறைக்கு முன்னர் சிங்கங்களின் உருவங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

 

கோவிலில் தேவியின் முன்னர் இருக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு – அது ”தரம் சீலா” என்று அழைக்கப்படும் ஒரு செவ்வகக் கல் – அக்கல்லில் பக்தர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்கிறார்கள். அந்தக் கல்லில் கை வைத்துக் கொண்டு யாரும் பொய் சொல்ல முடியாது என்றும் நம்பிக்கை. விழுப்புரம் அருகே இருக்கும் திருவாமாத்தூர் கோவிலிலும் இப்படி ஒரு வட்டப்பாறை உண்டு. அது பற்றி முன்னரே எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன் – திருவாமாத்தூர் கொம்பு பெற்ற ஆவினங்கள்.

 

தரம் சீலாவினைப் பார்த்து விட்டு வஜ்ரேஷ்வரி தேவியினை தரிசிக்க முன்னேறினோம். தேவியை மனதாரப் பிரார்த்திக்கொண்டு அங்கேயே நின்றிருந்தேன். காலை நேரம் என்பதாலும், கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் இன்னும் வராத காரணத்தாலும் சற்று நேரம் நிம்மதியாக தரிசிக்க முடிந்தது. வஜ்ரேஷ்வரி தேவியிடம் அனைவருக்கும் நல்லதே கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன்.

 

கோவிலின் உள்ளே பிரகாரத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் பார்ப்பதற்கு உண்டு. அவை பற்றியும், அங்கே நமது முன்னோர்கள் செய்த வேலை பற்றியும் அடுத்த பகுதியில் சொல்கிறேன்!
தொடர்ந்து பயணிப்போம்……

Feedback/Errata

Comments are closed.