14 பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்

சென்ற பகுதியில் காங்க்டா நகரில் குடிகொண்டிருக்கும் வஜ்ரேஷ்வரி தேவி பற்றியும் அக்கோவில் பற்றியும் பார்த்துக் கொண்டிருந்தோம். தொடர்ந்து இந்த வாரமும் கோவில் பற்றிய இன்னும் சில தகவல்களும் அனுபவங்களும் பார்க்கலாம். வஜ்ரேஷ்வரி அன்னையை தரிசித்து கையில் பிரசாதத் தட்டுகளுடன் வெளியே வந்தோம்! அது தவறென வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது! கோவில் பிரகாரம் முழுவதும் முன்னோர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எங்கள் குழுவில் இருந்தவர்களில் ஒருவரிடமிருந்து பிரசாதம் பறிபோனது!

 

கோவிலின் பிரகாரத்தில் இன்னும் சில சன்னதிகளும் உண்டு.  மகா காளிக்கு என ஒரு மூலையில் சன்னதி. சன்னதியின் வெளியில் அட்ட்ரா புஜி தேவி – பதினெட்டு கைகளுடன் தேவியின் உருவம் இருக்கிறது.  முன் நாட்களில் அங்கே ஆடு, கோழி போன்ற விலங்குகளை பலி இடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.  சில வருடங்களாக பலி இடுவது முற்றிலும் தடை செய்யப்பட, இப்போது காளியின் பலி பீடத்தில் இரத்தம் சிந்துவதில்லை! காளியை மனதில் நிறுத்தி வேண்டிக்கொண்டு அங்கிருந்து குரங்குகளை வேடிக்கை பார்த்தபடியே முன்னேறினோம்.

 

இக்கோவிலிலும் உங்கள் பெயரைச் சொல்லி, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுத்தால், மேளத்தினை தட்டி, ”இன்னாருக்கு நல்லதையே கொடு” என்று தேவியிடம் அவர்களும் பிரார்த்திக்கிறார்கள். பெரும்பாலான ஹிமாச்சலப் பிரதேசக் கோவில்களில் இந்த வழக்கம் இருக்கிறது – நமது கோவில்களில் இப்படி ஒரு வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை – நம் சார்பாக வேண்டிக் கொண்டு, அவர்களும் தங்களது பிழைப்பைக் கவனித்துக் கொள்கிறார்கள்!

 

தொடர்ந்து பிரகாரத்தைச் சுற்றி வருவோம். அடுத்து நாம் பார்க்கப் போவது மிகப் பழமையான ஒரு சிகப்பு பைரவர் சிலை. கிட்டத்தட்ட 5000 வருடம் பழமையான சிலை என்று எழுதி வைத்திருக்கிறார்கள். முக்கியச் சன்னதி மட்டும் திறந்திருக்க, பிரகாரத்தில் இருக்கும் சன்னதிகள் வெளியே கம்பிக் கதவுகள் போட்டு மூடி இருக்கிறது. கம்பிக் கதவுகள் வழியே இந்த சிகப்பு பைரவரை வேண்டிக்கொண்டோம்.  இந்த சிகப்பு பைரவர் சிலைக்கு ஒரு கதை உண்டு. அது என்ன கதை? பார்க்கலாமா?

 

ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு இயற்கைச் சீற்றத்தின் காரணமாகவோ, அல்லது அன்னிய நாடுகளின் தாக்கத்தினாலோ ஆபத்து வருவதற்கு முன்னதாகவே சிகப்பு பைரவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதோடு, மேனியும் வியர்த்து விட ஆரம்பித்து விடுமாம். 1905-ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தினை தாக்கிய நில நடுக்கத்திற்கு முன்னரும் இப்படி நடந்ததாக குறிப்பிடுகிறார்கள்.  சிகப்பு பைரவரிடம் அப்படி ஒரு அழிவு வந்து விடாது காப்பாற்ற பிரார்த்திக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

 

அடுத்ததாக ஒரு சிறிய அறை – அதிலும் வெளியே கம்பிக் கதவுகள். உள்லே ஒரு சிறிய செடி. பக்கத்திலேயே தரையிலே ஒரு கொப்பரை பதிக்கப் பட்டிருக்கிறது. இதற்கும் ஒரு கதை உண்டு. தேவிக்குப் பூஜை செய்ய நினைப்பவர்கள் இங்கே பூஜை செய்யலாம். நல்ல மனதோடு சிறிய பாத்திரத்தினால் தான்யங்களை போட்டால் கூட அந்தக் கொப்பரை நிறைந்து விடுமாம். போதும் என்ற மனதில்லாது மூட்டை மூட்டையாக தானியங்களை அந்தக் கொப்பரையில் கொட்டினாலும் நிறையவே நிறையாது என்று சொல்கிறார்கள்.

 

[dh]த்யானு பக்த் என்பவரின் கதையும் உண்டு. அவரது சிலையை தேவியின் சிலைக்கு நேர் எதிரே வைத்திருக்கிறார்கள். தேவியின் பிரத்யக்ஷமான தரிசனம் வேண்டி தவமிருக்க, அவர் வராது போகவே தனது தலையை வெட்டி தேவிக்கு பலியாக கொடுத்தாராம் த்யானு பக்த். அதன் பின்னர் அவருக்குக் காட்சி தந்த வஜ்ரேஷ்வரி தேவி, த்யானு பக்த் அவர்களை உயிர்பித்து அவருக்கு ஒரு வரமும் கொடுத்தாராம் – த்யானு பக்த் என்ன வரம் கேட்டாராம் தெரியுமா?

 

எனக்கு தரிசனம் தர இத்தனை காலம் தாழ்த்தி என் தலையை கொய்து பலி தந்த பிறகு வந்த மாதிரி காலம் தாழ்த்தாது, உனது பக்தர்கள் அனைவருக்கும் நல்ல தரிசனம் தர வேண்டும் எனச் சொல்ல, அன்னையும் அங்கே எழுந்தருளி வரும் பக்தர்கள் அனைவருக்கும் காட்சி தருவதாக ஒரு கதை.

 

இப்படி விதம் விதமான கதைகளைச் சொல்லியபடியே எங்களுடன் நண்பர் மனீஷ் வந்து கொண்டிருந்தார். அவர் எங்களுடன் வந்ததால் இந்தக் கதைகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சாதாரணமாக கோவில்களில் இப்படி இருக்கும் கதைகளை தெரிந்துகொள்ள அங்கே இருப்பவர்களின் உதவி தேவையாக இருக்கிறது. பல கோவில்களில் சிறப்பம்சங்களைச் சொல்ல யாருமே இருப்பதில்லை! நம் ஊர் கோவில்களில் இருக்கும் ஒவ்வொரு தூண்களுக்குள்ளும் ஒரு கதை ஒளிந்திருக்குமே!

 

கோவிலில் இருக்கும் அனைத்து தேவதைகளையும் பார்த்து பிரகாரத்தில் மூன்று சுற்றுகள் சுற்றி வந்து அனைத்து கதைகளையும் கேட்டு மனதில் ஒரு நிம்மதியோடு வெளியே வந்தோம். ஒவ்வொரு கோவிலிலும் அனுபவங்கள், சில கதைகள், பழக்க வழக்கங்கள் என்று எத்தனை எத்தனை விஷயங்கள் நமக்குக் கிடைக்கின்றன.  இதையெல்லாம் யோசித்தபடியே வெளியே வந்தோம். கோவிலின் வாயிலிலும் இரண்டு பொம்மைச் சிங்கங்கள் – பக்கத்திற்கு ஒன்றாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவற்றையும் பார்த்தபடியே வெளியே கடை வீதிக்கு வந்தோம்.

 

மாலையில் கடை வீதிக்கு வர வேண்டும் என பேசியபடியே அனைவரும் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அடுத்து காலை உணவை முடித்துக் கொண்டு அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்களுக்குப் பயணிக்க வேண்டும். என்ன இடங்கள் பார்த்தோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்னென்ன என்பதை வரும் பகுதிகளில் பார்க்கலாம்!

 

தொடர்ந்து பயணிப்போம்….

Feedback/Errata

Comments are closed.