="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

19 பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட!

வெளியே இருந்த தகவல் பலகை பார்த்ததும் எங்களுடன் வந்திருந்த குழுவில் இருந்த சிறுவர்களுக்கு ஒரு குதூகலம். “தொடர்ந்து கோவிலாக பார்த்து கொஞ்சம் அலுப்பாக இருந்த அவர்களுக்கு அந்த இடம் கொஞ்சம் மாற்றமாக இருக்குமே என்று நினைத்து, எங்களுடைய பயணத்தில் அந்த இடம் பற்றி யோசிக்கவில்லை என்றாலும், அங்கே போக முடிவு செய்தோம்.

 

கோவிலின் வெளியே இருந்த தகவல் பலகையில் கோபால்பூர் Zoo 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்று தெரிந்தவுடன், விசாரித்துக் கொண்டு அங்கே வாகனத்தில் பயணித்தோம். செல்லும் வழியெங்கும் பாலம்பூர் நகருக்கே உரித்தான தேயிலைத் தோட்டங்கள் இருக்க, அவற்றை பார்த்தபடியே பயணித்து மிருகக்காட்சி சாலையின் வாயிலை சென்றடைந்தோம்.

 

Dhauladhar National Park என்றும் Gopalpur Zoo என்றும் அழைக்கப்படும் இந்த மிருகக்காட்சி சாலை, சுற்றுலா வருபவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று.  இவ்விடத்தில் பல வகையான விலங்குகளை முடிந்த அளவிற்கு சுதந்திரமாக விட்டிருக்கிறார்கள். ”சித்தன் போக்கு சிவன் போக்கு” என்பது போல, தன்னிச்சையாக சுற்றித் திரிந்த விலங்குகளை அவற்றின் இயற்கைச் சூழலிலிருந்து அகற்றி இப்படி மிருகக்காட்சி சாலைகளுக்குள் அடைத்து வைப்பது கொடுமையான விஷயம்.  என்றாலும் சற்றே பெரிய பரப்பளவு கொண்ட இடத்தில் இந்த மிருகக்காட்சி சாலையில் இருப்பதால் கொஞ்சம் சுதந்திரமாக உணர்ந்து கொள்ள முடியுமோ என்னமோ?

 

உள்ளே நுழையவும், வாகனம் நிறுத்தவும், புகைப்பட கருவிகளை உள்ளே எடுத்துச் செல்லவும் என விதம் விதமாக கட்டணங்களை வசூலித்த பிறகே நம்மை உள்ளே அனுமதிக்கிறார்கள். எல்லா கட்டணங்களையும் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தோம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மிருகக்காட்சி சாலை சுமார் 12.5 ஹெக்டேர் அளவு பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் பலகை தெரிவிக்கிறது.

 

பக்கத்திலேயே இன்னுமொரு தகவல் பலகையில் இங்கே இருக்கும் பல்வேறு விலங்குகள், பறவைகள், மரங்கள் என பல தகவல்களை வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுத்தை, சிங்கம், குரங்குகள், பல வித மான்கள், பறவைகள் என நிறையவே இருக்கின்றது இவ்விடத்தில். மிருகக்காட்சி சாலையின் நுழைவுப் பகுதியிலேயே கரடிகள் இருக்க, அவற்றைப் பார்த்த பின் உள்ளே நுழைந்தோம்.

 

மலைப்பகுதி என்பதால் நிறைய பறவைகளும் இங்கே வந்து செல்வதுண்டு. இங்கே இருக்கும் சில தனியார் தங்குமிடங்கள் பறவைகளை பார்ப்பதற்கென்றே சில சுற்றுலாக்களை ஏற்படுத்துவதும் உண்டு எனத் தெரிகிறது.  Bird Watching என்று அழைக்கப்படும் விஷயம் மிகவும் சந்தோஷமான விஷயம்.  ஒவ்வொரு பறவைகளையும் பார்த்துக் கொண்டும், அவைகளின் பரிபாஷைகளை உற்றுக் கேட்டுக் கொண்டும் இருப்பது அலாதியான விஷயம்.

 

இம்மாதிரி ஒரு இடத்திற்கு, சில கவிதைப் புத்தகங்களைக் கொண்டு சென்று பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே படித்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.  நேரம் கிடைக்க வேண்டுமே! ஒரே ஓட்டமாக அல்லவா இருக்கிறது வாழ்க்கை!

 

நாய் குரைக்கும் என்று நமக்கு எல்லாருக்கும் தெரியும்.  மான்கள் கூட குரைக்கும் என்று தெரியுமா உங்களுக்கு! மான் வகைகளில் ஒரு குறிப்பிட்ட மான்கள் குரைக்கும்.  தில்லி zoo-விலும் இப்படி Barking Deer பார்த்திருக்கிறேன். அதே வகை மான்கள் இங்கும் காண முடிந்தது. ஒரு வகை மான்களை ”சாம்பார்” என்றும் அழைப்பதுண்டு! இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்!

 

இப்படியாக விலங்குகளையும், பறவைகளையும் பார்த்துக் கொண்டே வரும்போது, அங்கே இருந்த பூக்களையும், மரங்களையும் பார்க்கத் தவறவில்லை. ஒவ்வொரு ராசிக்கான மரங்களையும் அதன் பெயர்களையும் எழுதி வைத்ததோடு அம்மரங்களையும் அங்கே காண முடிந்தது. எல்லாவற்றையும் ரசித்தபடியே சிறுத்தைப் புலி இருக்கும் இடத்திற்கு வந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தும் சிறுத்தை இருப்பதாகத் தெரியவில்லை! ”அண்ணாத்தே எங்கே இருக்காரோ?” என்று நினைத்தபடியே அனைவரும் நகர்ந்து விட, நானும் ஒரு சிலரும் மட்டும், பார்த்தால் கொஞ்சம் புகைப்படம் எடுக்கலாமே என நின்று கொண்டிருந்தோம்!

 

நாங்கள் நினைத்தது, சிறுத்தைக்கு டெலிபதி மூலம் சென்றடைந்தது போலும்.  புதர்களுக்கு நடுவே தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தை கொட்டாவி விட்டு, சோம்பல் முறித்தபடியே எழுந்து நடக்கத் துவங்கியது.  ஒன்று தான் இருக்கிறதென நினைத்தால் இரண்டு மூன்று என தொடர்ந்து காட்சி தந்தன.  ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன்.  என்னவொரு கம்பீரம்! ஆனாலும், சுதந்திரமாகத் திரிய வேண்டிய என்னை இப்படி சிறு பரப்பளவில் அடைத்து வைத்துவிட்டீர்களே என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது எனக்கு!

 

அடுத்ததாக சிங்கங்களைப் பார்க்கலாம் என நகர்ந்தோம்.  அவற்றுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. மறைவான இடத்திலிருந்து வெளியே வரவே இல்லை!   அவ்வப்போது கர்ஜனை மட்டும் செய்து தன் இருப்பைச் சொல்லியபடி இருந்தது. விலங்குகளுக்கு எல்லாம் சாப்பாட்டு நேரம் போல! ஒரு ஜீப்பின் பின் பக்கத்தில் மாமிசங்களை போட்டு எடுத்துக் கொண்டு வந்தார் ஒரு பணியாளர்.

 

வேட்டையாடி உண்டு பழகிய விலங்குகளுக்கு, இப்படி Ready to Eat வகையில் உணவு தந்தால் பிடிப்பதில்லை போலும். சில கூண்டுகளில் சீண்டப்படாது கிடந்தன மாமிசத் துண்டுகள்!

 

நிறைய விலங்குகள், பறவைகள் என பார்த்தபடியே வந்ததில் நேரம் போனது தெரியவில்லை. அனைத்தையும் பார்த்து வெளியே வந்தால் மலைகளிலிருந்து வரும் தண்ணீரை குழாய்களின் வழியே வரவைத்து இருந்தார்கள்.  தண்ணீர் இயற்கையாகவே அப்படி ஒரு சில்லிப்பு! சுவையும் அலாதி! தண்ணீரின் இந்த இயற்கையான சுவைக்கு முன் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் எம்மாத்திரம்!

 

அனைத்தையும் ரசித்து அங்கிருந்து வெளியே வந்தோம். என்னதான் அங்கே வரும் மக்களுக்கு இவ்விலங்குகளையும், பறவைகளையும் பார்ப்பதில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்றாலும், தன் சூழலிலிருந்து மாறுபட்டு, கூண்டுகளுக்குள் அடைந்து கிடக்கும் விலங்குகளைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாப உணர்வும் வருவது நிஜம்!

 

தொடர்ந்து பயணிப்போம்….

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட! by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.