2 பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை

 

தில்லியின் எல்லையைத் தொட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்தோம். அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை! டிசம்பர் மாதத்தின் 25-ஆம் நாள். பொதுவாகவே இந்நாட்களில் குளிரும் பனிமூட்டமும் கொஞ்சம் அதிகம் தான். சூரிய உதயமே பல நாட்களில் எட்டு மணிக்கு மேல் தான் – அதுவும் அவருக்கு மனதிருந்தால், கொஞ்சம் வெளியே வந்துவிட்டு மீண்டும் போய், கண்ணாமூச்சி விளையாடுவார்!

winter roads-part-2-1

பனிபடர்ந்த நெடுஞ்சாலை….

எங்கெங்கும் பனிமூட்டம் – மேகக்கூட்டங்கள் தரையில் இறங்கிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு பனிமூட்டம் – Visibility மூன்று முதல் நான்கு மீட்டர் அளவு தான். சாலையெங்கும் மேகம் பரவிக்கிடக்க, மிதமான வேகத்தில் தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இவ்வேகத்திலேயே தான் நாங்கள் முதலில் செல்ல வேண்டிய சிந்தபூர்ணி வரை செல்ல முடியும் என்று தோன்றியது. தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட 425 கிலோமீட்டர் தொலைவு! எப்படியும் மாலை ஆறு மணிக்குள் சென்றுவிடலாம் என நினைத்திருந்தோம் – பனிமூட்டத்தினால் கொஞ்சம் தாமதமாகலாம் எனத் தோன்றியது!

 

தொடர்ந்து ஒரு வித எச்சரிக்கையுடனேயே வாகனத்தினைச் செலுத்தினார் எங்கள் ஓட்டுனர் ஜோதி என்கிற நாகஜோதி! பெயரிலிருந்தே தெரிந்திருக்குமே – ஆமாம் அவர் ஒரு தமிழர் – நாங்கள் வண்டி எடுத்ததும் தில்லி வாழ் தமிழர் ஒருவரிடம் தான். அதனால் நான் முன் இருக்கையில் அவருடன் அமர்ந்து தமிழில் உரையாடியபடியே, சில புகைப்படங்களையும் எடுத்தபடியே பயணித்தேன்.  எச்சரிக்கையுடனேயே வாகனத்தினைச் செலுத்த வேண்டிய சூழலில் அவரையும் அதிகம் தொந்தரவு செய்வது நல்லதல்லவே!

 

தில்லியிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசம் செல்லும்போது ஹரியானா, பஞ்சாப் என்ற இரு மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால் இரு மாநிலங்களுக்கான சாலை வரிகளையும் கட்ட வேண்டும். ஹிமாச்சலுக்கான கட்டணத்தினை இணையம் மூலமாக முன்னரே செலுத்தியதால், தில்லியைக் கடந்தவுடன் ஹரியானாவிற்கான கட்டணத்தினைச் செலுத்தி எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.

Transporting Milk-Part-2-2

குளிரிலும் பால் விற்பனைக்குச் செல்லும் ஹரியான்வி….

ஹரியானா மக்கள் குளிர் காலத்தில் ஒரு பெரிய கம்பளிப் போர்வை அல்லது லோஹி என அழைக்கப்படும் கம்பளி போர்வைகளால் தங்களைச் சுற்றிக் கொள்வது வழக்கம். சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் தலை முதல் கால் வரை மூடியபடிச் செல்லும் பலரை நெடுஞ்சாலைகளில் பார்க்க முடிந்தது! அத்தனை குளிரிலும் பால் வியாபாரிகள் நான்கு பால் பாத்திரங்களை வண்டியின் இரு புறங்களிலும் தொங்கவிட்டு பயணித்துக் கொண்டிருந்தார்கள். வேலை செய்வது முக்கியமாயிற்றே!

 

இப்படி பயணித்துக் கொண்டிருந்ததில் எங்கள் குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி. சிலருக்கு காலையில் எழுந்து இப்படி பயணம் செய்வது கஷ்டம்.  வண்டியில் ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.  ஆனால், நாங்கள் அனைவரும் என்னதான் அதிகாலையில் எழுந்து விட்டாலும், குடும்பமாக பயணிப்பது போல அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டும், கதைகள் பேசிக்கொண்டும் இனிமையாக பயணத்தினை தொடங்கி இருந்தோம்.

 

காலையில் பெருமாள் கோவிலில் சுடச்சுட ஆளுக்கு ஒரு தொன்னை மட்டுமே பொங்கல் சாப்பிட்டதால் [ஒரு தொன்னை தொந்தி பெருத்த எனக்கு எம்மாத்திரம்!!] வயிறு, “ஹலோ, என்னைக் கொஞ்சம் கவனியேன்!” என்று சொல்ல ஆரம்பித்தது! நாங்களும் தில்லி எல்லையைத் தாண்டி சோனிபத், பானிபத் கடந்து கர்னால் எல்லையைத் தொட்டிருந்தோம். சுமார் 130 கிலோ மீட்டர் மூன்று மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கிறோம்.

 

பொதுவாகவே வட இந்திய நெடுஞ்சாலைகளில் சாலை உணவகங்கள் அத்தனை சுகமானதாக இருப்பதில்லை. வெகுசில இடங்களில் மட்டுமே நல்ல உணவகங்கள் இருக்கின்றன.  அப்படி இந்தப் பயணத்தில் கர்னால் நகரத்தினை விட்டால், பெரும்தொலைவிற்கு நல்ல உணவகங்கள் இல்லை என்பதால், கர்னாலிலேயே சாப்பிட முடிவு செய்தோம்.  ஓட்டுனர் ஜோதியிடம் சொல்ல, அவரும் இங்கேயே சாப்பிடலாம், அப்புறம் பஞ்சாபில் தான் சாப்பிட முடியும் என்று ஒரு சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தினார்.

 

அங்கே என்ன சாப்பிட்டோம், தொடர்ந்த பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா!

 

தொடர்ந்து பயணிப்போம்……

Feedback/Errata

Comments are closed.