21 பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்

சென்ற பகுதியில் பைஜ்னாத் கோவில் பற்றிய சில தகவல்களைச் சொல்லி இருந்தேன். இப்பகுதியில் அக்கோவிலின் சுற்றுச் சுவர்களில்/பிரகாரத்தில் இருந்த சில சிறப்பான சிற்பங்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு சிற்பமும் என்ன அழகு! அதிலும் சில சிற்பங்கள் நம் தமிழகத்தில் பார்க்கும் சிற்பங்களைப் போலவே இருந்தன. பொதுவாகவே வடக்கில் பார்க்கும் சிலைகள் எல்லாமே பளிங்குக் கற்களில் தான் அமைந்திருக்கும். ஆனால் இச்சிலைகள் நமது ஊர் போலவே வடித்திருக்கிறார்கள்!

 

இக்கோவிலில் இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா?

 

  1. முதலில் ஆனைமுகத்தான் – அவன் தானே முழு முதற்கடவுள்! இக்கோவிலில் இருக்கும் கணபதி – நர்த்தன கணபதி. வித்தியாசமாக சிங்கம், மூஷிகம் என இரண்டு வாகனங்கள் – இடப்புறத்தில் சிங்கமும் வலப் புறத்தில் மூஷிக வாகனம். ஆறு கரங்கள். நர்த்தன விநாயகர் என்பதாலோ என்னமோ, மேடையின் அடி பாகத்தில் மூன்று பேர் மத்தளம் வாசிக்கும்படி வடித்திருக்கிறார் அந்த சிற்பி!

 

  1. ஹரியும் சிவனும் ஒண்ணு! அதை அறியாதவன் வாயில் மண்ணு! என்று சொல்வதுண்டு. இங்கே இருக்கும் ஒரு சிலை – ஹரி ஹர் – மூன்று தலைகளோடு காட்சியளிக்கும் இச்சிலையில் வலப்பக்கம் சிவனையும் இடப்பக்கம் விஷ்ணுவையும் குறிக்கிறது. அதற்குத் தகுந்த மாதிரி வலப்பக்க கை ஒன்றில் திரிசூலம் இருக்க, இடப்பக்க கை ஒன்றில் சக்கரம் இருக்கிறது. கீழ்ப்பக்கத்தில் இடப்பக்கம் லக்ஷ்மியும், வலப்பக்கத்தில் பார்வதியும் அமைத்திருக்கிறார் சிற்பி. நுணுக்கமான வேலைப்பாடுகள் இச் சிற்பத்திலும்.

 

  1. கல்யாண சுந்தரர்: சிவபெருமானும் பார்வதி தேவியும் கல்யாண கோலத்தில். நடுவே விஷ்ணு கன்யா தானம் செய்து கொடுக்கிறார்! இச்சிற்பம் வெகுவாக சிதிலம் அடைந்திருக்கிறது. ஆகையால் இதன் அழகு அவ்வளவாக தெரியவில்லை.

 

  1. 4. கார்த்திகேயன்: பொதுவாக முருகப் பெருமானின் ஆறுமுகங்களும் வரிசையாக இருப்பது பார்த்திருக்கிறோம். மூன்று முகங்கள் – அதன் மேலே மூன்று முகங்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? இங்கே இருக்கும் சிற்பம் அப்படி இருக்கிறது. முதன் முறையாக ஆறுமுகனின் இப்படியான சிற்பத்தினை இங்கே தான் பார்த்தேன். மயில்வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் அந்த சிற்பத்தினை நீங்களும் பார்க்க உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…….

 

  1. அந்தகாசுரன் வதம்: விஷ்ணுவின் விராட ரூபம் பல ஓவியங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சிவனின் விராட ரூபம் பார்த்ததுண்டா? அந்தகாசுரன் எனும் அசுரனுக்கு பயங்கர பலம். பார்வையற்றவனாக இருந்தும், தனது தவ வலிமையால், ஆகாயம் பூமி ஆகிய இரண்டு இடங்களிலும் வதம் செய்ய முடியாது என்ற வரம் பெற்றிருந்தவன். தனது திரிசூலம் கொண்டு அந்தரத்தில் அந்தகாசுரனின் சிரம் கொய்து வதம் செய்த கோலம். நான்கு சிரங்களும், பதினாறு கைகளும் கொண்ட இந்த சிற்பம் இதோ உங்கள் பார்வைக்கு! எத்தனை வேலைப்பாடு இச்சிற்பத்தில்.

 

  1. சாமுண்டா தேவி: பத்து கைகளுடன் காட்சி தருகிறார் சாமுண்டா தேவி. ஒரு அசுரனை வதைத்து தனது காலடியில் வைத்து, மற்றொரு அசுரனை தனது குறுவாளினால் வதைக்கும் வடிவில் இருக்கும் இச்சிலையில் கபாலங்களினால் ஆன மாலை! கன்னத்தில் ஒற்றை விரல் வைத்து அழகாய் இருக்கும் சிலை. என்னவொரு கலைநயம்…..

 

  1. அர்த்தலக்ஷ்மிநாராயணன்: அர்த்தநாரீஸ்வரர் – சிவனும் பார்வதியும் பாதிப்பாதியாக இருக்கும் சிற்பம் நமது கோவில்கள் பலதிலும் பார்த்திருக்க முடியும். அர்த்தலக்ஷ்மி நாராயணன் பார்த்ததுண்டா? கருட வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் இச்சிற்பத்தில் பத்து கைகளுடன் காட்சி தருகிறார். வலப்புறத்தில் விஷ்ணு, இடப்புறத்தில் லக்ஷ்மி.  பார்த்துப் பார்த்து ஒவ்வொரு விஷயத்தினையும் சிறப்பாக செய்திருக்கிறார் இந்தச் சிற்பி!

 

  1. இந்த சிற்பமும் சிவபெருமானின் ரூபமாகத் தான் தெரிகிறது. இது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

 

  1. சூரியதேவன்: ஏழு குதிரைகள் கொண்ட தேரில் அமர்ந்து இருப்பது போல வடிவமைத்திருக்கிறார்கள்.

 

இப்படி கோவில் முழுவதும் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து ரசித்த பிறகு இயற்கைச் சூழலில் குழுவினரினையும் சில புகைப்படங்களும் எடுத்து முடித்தேன்!  அதன் பிறகு அனைவரும் வெளியே சின்னதாய் ஒரு Shopping செய்ய, நான் அங்கே கண்ட காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். மெதுவாக அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் அனைவரும் காங்க்ரா நகர் நோக்கி பயணத்தினைத் துவங்கினோம்.  அன்றைக்கு இரவும் காங்க்ரா நகரில் தான் தங்க வேண்டும்……

 

அப்பயணமும் அதன் பிந்தைய நிகழ்வுகளும் அடுத்த பகுதியாக!

 

தொடர்ந்து பயணிப்போம்….

Feedback/Errata

Comments are closed.