="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

23 பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்

இப்பயணத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து படித்து வந்த உங்களுக்கும் புதியதாய் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருந்தால் இன்னமும் அதிக மகிழ்ச்சி. இப்பயணத்தின் கடைசி பகுதிக்கு நாம் வந்து விட்டோம்.

 

அதிக குளிர் என்றாலும் நான்கு மணிக்கே எழுந்து குளித்து தயாராகிவிட்டேன். தங்குமிடத்தில் Geyser மட்டும் இல்லாவிட்டால் சுடு நீர் இல்லாமல் குளிக்க யோசிக்க வேண்டியிருந்திருக்கும்! சில தங்குமிடங்களில் சுடு நீர் வசதிகள் சரியாக இருப்பதில்லை. நாங்கள் தங்கிய இடம் பரவாயில்லை. இவ்வசதிகள் இருந்தன! காலையிலே குளித்து விட்டதால், மற்றவர்கள் தயாராவதற்குள் கொஞ்சம் தொலைவு நடந்து சென்று வந்தேன். இப்படி நடந்து செல்வதால் அதிகாலையில் நல்ல காற்று சுவாசிக்க முடிந்தது!

 

நடை முடித்து திரும்பவும் தங்குமிடம் வந்தபோது பெரும்பாலானவர்கள் தயாராகி இருந்தார்கள். இப்பயணத்தில் எங்களுக்கு நிறையவே உதவி செய்த நண்பர் மனீஷ்-ஐ அலைபேசியில் அழைத்து நாங்கள் புறப்படத் தயார் என்று சொல்லவே  அவரும் இதோ வருகிறேன் எனச் சொல்லி வந்தார். வரும்போது காங்க்ரா தேவி [வஜ்ரேஷ்வரி தேவி] கோவிலுக்குச் சென்று அன்னையின் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்து தில்லி வந்தால் கட்டாயம் தெரிவிக்கச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.

 

வழி நெடுகிலும் பனிமூட்டம் தொடர்ந்து இருக்க, மிதமான வேகத்திலேயே பயணிக்க முடிந்தது. திரும்பி வரும் வழியில் பக்ரா-நங்கல் அணைக்கட்டு பார்க்க நினைத்திருந்தோம். நாங்கள் பயணித்த பாதையிலிருந்து விலகி சில கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியிருக்கும் என்பதாலும், பனி மூட்டத்தில் அத்தனை தெளிவாகப் பார்க்க முடியாது என்பதாலும் அத்திட்டத்தினை கைவிட்டு, நாங்கள் சென்ற பாதையிலே இருந்த ஒரு சிறிய அணைக்கட்டினைப் பயணித்தபடியே பார்த்து, சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.

 

நாங்கள் செல்லும்போது பார்த்த மாதிரியே இப்போதும் வழியெங்கும் சீக்கியர்கள் சில கொட்டகைகளை அமைத்து சாலையில் செல்லும் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டிருந்தார்கள். தங்களது ஒவ்வொரு குருமார்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று இப்படி அனைவருக்கும் உணவு அளிப்பதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அதுவும் தானம் தானே என்ற எண்ணமில்லாது நல்ல உணவு அளிப்பார்கள்.  வழி நெடுகிலும் இப்படி பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி பயணிகள் அனைவருக்கும் நாள் முழுவதும் உணவளிப்பது சுலபமான விஷயமல்ல. அதனையும் களைப்பே இல்லாது மகிழ்வுடன் செய்வது எத்தனை நல்ல விஷயம்.

 

மக்காச்சோள மாவில் செய்த ரொட்டியும், அதற்கு பக்க துணையாக  கடுகுக் கீரையில் செய்த சப்ஜியும், வெண்ணைத் துண்டும் வைத்து ஒரு இடத்தில் கொடுக்க, மற்றொரு இடத்தில் தந்தூரி ரொட்டி, வெண்ணை, இரண்டு சப்ஜிகள் என கொடுத்தார்கள். சில இடங்களில் தேநீரும் ப்ரெட் பகோடாவும் கொடுத்தார்கள். அனைத்தையும் வாங்கிச் சாப்பிட்ட படியே பயணிப்பது நமக்கு நல்லதல்ல! என்றாலும் ஒரு சில இடங்களில் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு ஒரு தட்டில் வாங்கி, அனைவரும் சிறிது பங்கிட்டு உண்டோம். அவர்களுக்கும் கொடுத்த மகிழ்ச்சி, நமக்கும் சாப்பிட்ட திருப்தி!

 

தொடர்ந்து பயணித்து வரும் வேளையில் வயலில் வெல்லம் காய்ச்சுவதைப் பார்த்தவுடன் திரும்பி வரும்போது வெல்லம் வாங்கிக் கொள்ள வேண்டும் எனச் சொன்னது நினைவுக்கு வர, அப்படி ஒரு இடத்தில் வாகனத்தினை நிறுத்தினோம். அனைவரும் தேவையான வெல்லத்தினை வாங்கிக் கொள்ள, நானும், ஓட்டுனர் ஜோதியும் அங்கே அடுக்கி வைத்திருந்த கரும்புகளில் இரண்டினை எடுத்து சுவைக்க ஆரம்பித்தோம். இப்படி கரும்பினைச் சுவைத்து எத்தனை வருடங்களாகி விட்டன! நெய்வேலியில் இருந்தவரை பொங்கல் சமயத்தில் கரும்பு நிறையவே சாப்பிட்டிருக்கிறேன். தில்லி சென்ற பிறகு கரும்பு இப்படிச் சாப்பிட வாய்ப்பு இருந்ததில்லை.

 

பத்து பதினைந்து நாட்களிலேயே பொங்கல் வருவதால், அனைவரும் வெல்லம் வாங்கிக் கொண்டு தயாராக எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். வழியில் இன்னும் ஒரு இடத்தில் ஆரஞ்சு போலவே இருக்கும் ‘கின்னு’ விற்க அதனையும் வாங்கி வண்டியில் போட்டுக் கொண்டு தொடர்ந்து பயணித்தோம். நான்கு நாட்கள் பயணம் முடிவடைவதில் அனைவருக்கும் வருத்தம். இப்படித் தொடர்ந்து பயணித்தபடியே, பல இடங்களைப் பார்த்தபடியே, பல்வேறு அனுபவங்களை பெற்றபடியே இருந்தால் நன்றாக இருக்கும் என்றாலும், வேலைக்குச் சென்று தானே ஆகவேண்டும்!

 

குழுவினர் அனைவரும் இப்பயணித்தினைப் பற்றியும், அனைத்து விஷயங்களையும் சிலாகித்துப் பேசியபடி பயணிக்க, தில்லி வந்து சேர்ந்தோம்.  ஓட்டுனருக்கும், வாகனத்திற்குமான கட்டணங்களைக் கொடுத்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தோம். டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி புறப்பட்டு 29-ஆம் தேதி திரும்பி வந்தோம். மொத்தம் நான்கு நாட்கள். கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்களை கணக்கில் கொண்டால் பயணத்திற்கான மொத்த செலவு மிகக் குறைவே. ஆளொன்றுக்கு ரூபாய் 4000/- அளவில் தான் ஆனது.

 

ஹிமாச்சல் மாநிலத்தில் பார்த்த சில இடங்களைப் பற்றி, அங்கே கிடைத்த அனுபவங்களை முதலில் வலைப்பூவிலும், இப்போது மின் புத்தகமாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. படித்த உங்களுக்கும் இந்த இடங்களைப் பார்க்கும் ஆசை வந்தால் அதுவே இந்தப் புத்தக முயற்சிக்கு ஒரு வெற்றி என நான் நினைக்கிறேன். விரைவில் அடுத்த பயணம் பற்றிய மின்நூல் உடன் சந்திக்கிறேன்.

 

பயணம் செய்வது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.  ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம்….

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும் by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.