5 பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்…

Walking on highway-part-5-1

கவலைகள் மறந்து நடக்கும் முதியவர்….

இப்படியாக வழியெங்கும் உணவு வகைகளை ருசித்தபடியும், பயணத்தினை சுகமான முறையில் தொடர்ந்தும் நாங்கள் தில்லியிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் சிந்த்பூர்ணி எனும் இடத்திற்கு மாலையில் வந்து சேர்ந்தோம். எங்கள் அலுவலக நண்பரின் உறவினர் ஹிமாச்சலத்தில் இருப்பதால் அவர் மூலமாகத் தான் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தோம். அன்று மதியத்திலிருந்தே அவர் அலைபேசியில் அழைத்து எப்போது வருவீர்கள் என அக்கறையோடு விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

 

எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் பற்றிய விவரங்களைத் தந்ததோடு சிந்த்பூர்ணியில் இருக்கும் ஒருவரிடம் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படியும் பணித்திருந்தார். நாங்கள் அனைவரும் சிந்த்பூர்ணி பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கும் தங்குமிடத்தில் உடைமைகளை வைத்துவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோவிலுக்கு எங்கள் வாகனத்திலேயே பயணித்தோம்.

 

பொதுவாக பேருந்து நிலையத்திற்கு மேல் தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை. ஆனாலும் எங்களுக்கான உதவி செய்ய வந்திருந்த நபர் எங்கள் வாகனத்தினை கோவில் வரை கொண்டு செல்ல உதவினார். பாதை சற்றே குறுகலானது மட்டுமல்லாது இரண்டு புறமும் கடைகள் நிறைய இருப்பதால் மெதுவாகத்தான் செல்ல வேண்டும். சற்றே மேட்டுப்பாங்கான சாலையும் கூட.  கோவிலின் அருகே இறங்கிக் கொண்டோம்.

 

இக்கோவில் இருக்கும் இடம் சற்றே வித்தியாசமானது.  கீழ்ப்புறம் இருக்கும் சாலையில் நிறைய கடைகள் பூஜைக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்கிறார்கள். கோவிலுக்குச் செல்லும் பாதை மேலே உள்ள சாலையில் இருக்கிறது. என்றாலும் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு அக்கடையில் இருக்கும் படிக்கட்டுகள் வழியே மேலே சென்றால் நீங்கள் மேலுள்ள சாலைக்கும்/கோவில் பாதைக்கும் சென்று விடலாம்! இப்படிப்பட்ட வசதியை நான் எங்கும் பார்த்த நினைவில்லை.

 

அப்படி ஒரு கடைக்குச் சென்று அங்கே காலணிகளை கழற்றி வைத்து விட்டு, பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டோம் – 10 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை வசதிக்குத் தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம் – விதம் விதமாய் தட்டுகளில் பூஜைப் பொருட்களை வைத்திருக்கிறார்கள்.  கட்டாயம் அதில் ஒரு இனிப்பு – ரவா ஹல்வா, பாயசம் [(kh)கீர்], லட்டு, பர்ஃபி என ஏதாவது ஒன்று உண்டு.  இப்படி வைத்துக் கொடுப்பதை எடுத்துக் கொண்டு படிகளின் வழியே மேலே சென்றோம்.

 

பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலுக்கான பாதையில் முன்னேறினோம். சாதாரணமாக இக்கோவிலில் நவராத்திரி சமயங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் அப்படி திருவிழாக்கள் இல்லாத காரணத்தினால் அத்தனை கூட்டமில்லை. மிகச் சுலபமாக தேவியை தரிசிக்க முடிந்தது. நின்று நிதானித்து அன்னையின் சரண் பற்றினோம். இக்கோவிலில் இருக்கும் தேவியின் பெயர் சின்னமஸ்திகா தேவி.

 

சிந்த்பூர்ணி கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்று. சக்தி பீடங்கள் பற்றிய கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சதி தேவியின் உடல் 51 பகுதிகளாக துண்டிக்கப்பட்டு 51 இடங்களில் விழ, அவ்விடங்களில் சக்தி பீடங்களாக தேவிக்கு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மா சிந்த்பூர்ணி அப்படி ஒரு சக்தி பீடம் – தேவியின் நெற்றி/தலைப் பகுதி விழுந்த இடம் என்று சொல்கிறார்கள். அதனால் இங்கே இருக்கும் தேவிக்கு தலை கிடையாது. அலங்காரம் தான்.

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் சிந்தையில் இருக்கும் அனைத்து கவலைகளையும் போக்க வல்லவள் என்றும், அவளைச் சரணடைந்தால் போதும் என்றும் நம்புகிறார்கள்.  உலகியல் கவலைகளை மறந்து விட இத்தலம் சிறப்பானது என்றும், எல்லாக் கவலைகளையும் அன்னையிடம் விட்டு கவலையில்லாத மனிதனாக வாழ இதை விட வேறு வாய்ப்பில்லை என்றும் நம்புகிறார்கள்.  இக்கோவில் பற்றிய வேறு சில வரலாறும் உண்டு. அதைப் பற்றியும் வேறு சில அனுபவங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

 

இப்பகுதியினை முடிக்குமுன்னர், கோவில் இருக்கும் இடம் பற்றியும் சொல்லி விடுகிறேன்.  ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஊனா [UNA] மாவட்டத்தில் இருக்கிறது இந்த சிந்த்பூர்ணி. சோலா சிங்கி மலைத் தொகுப்பில் இருக்கிறது இவ்விடம். கோவில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். பொதுவாகவே இங்கே மிதமான வெட்பநிலை தான்.  வருடம் முழுவதுமே இங்கே சென்று தரிசனம் செய்ய முடியும் என்பதும் ஒரு வசதி.

 

தொடர்ந்து பயணிப்போம்……

Feedback/Errata

Comments are closed.