7 பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்

 

 

கோவிலை நோக்கி நடக்கும் பாதையில் ஒரு கோவில். அங்கே சின்னத் திருவடியாம் அனுமனின் இரண்டு திருவுருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருக்க, அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு மேலே நகர்ந்தோம். இது போல ஒருவருக்குப் பின்னால் ஒருவராக அனுமனை வேறு எங்கும் பார்த்த நினைவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் விளங்கவில்லை.

 

காலை நேரத்திலேயே பிரசாதக் கடைகள் திறந்திருந்தார்கள். கூடவே பலவிதமான உடைகள், பொருட்கள் என கடைகளில் விற்பனைக் காத்திருந்தன. அவற்றையெல்லாம் நோட்டம் விட்டபடியே நடந்தோம். வழியில் Vishwamitra Hotel and Restaurant எனும் பதாகை பார்த்தவுடன் காலை உணவு சாப்பிடாத நினைவு வந்தது. கோவிலில் எத்தனை நேரமாகும் என்பது தெரியாததால் காலை உணவினை முடித்துவிடலாம் என உள்ளே நுழைந்தோம். அது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. மதிய உணவு சாப்பிட ரொம்பவே நேரமானது.

 

பதினான்கு பேர் என்பதால் இரண்டு மூன்று டேபிள்களைச் சேர்த்து போட்ட பிறகும் சிலருக்கு இடம் போதவில்லை. நானும் இன்னும் சிலரும் தனியாக வேறு இடத்தில் அமர்ந்தோம். சிலர் பூரி மசாலா, சிலர் ஆலு பராட்டா, ஒரு சிலர் பனீர் பராட்டா, சோலே பட்டூரா என்று சொல்ல, அனைத்தையும் தயார் செய்ய சிறிது நேரம் பிடித்தது. அதுவரை அனைவரும் அரட்டை அடித்தபடி இருக்க, நான் கேமராவிற்குத் தீனி போட்டேன். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே இருப்பது வழக்கமாகி விட்டது!

 

ஒருவழியாக கேட்டவை கிடைக்க, அனைவரும் களத்தில் இறங்கி ஒரு கை பார்த்தனர். சாப்பிட்டு முடித்து அதற்கான கட்டணத்தினைக் கொடுத்து அங்கிருந்து நகர்ந்தோம். செலவும் அப்படி ஒன்றும் அதிகமாக ஆகவில்லை. 14 பேருக்கு ஆயிரத்திற்கும் குறைவு தான். வெளியே வந்து கோவிலை நோக்கிய நடைப் பயணத்தினைத் தொடர்ந்தோம். உணவகத்தினை விட்டு வெளியே நடக்கும்போது பார்த்தால் காலையிலேயே பானி பூரி விற்பனை தொடங்கி இருந்தது. வட இந்தியர்களுக்கு இந்த பானி பூரி சாப்பிடாவிட்டால் ஜன்ம சாபல்யம் அடையாதோ என்னமோ!

 

விதம் விதமாய் மலைப் பிரதேசத்துப் பழங்கள், கடைகளில் இருந்த பொருட்கள் எனப் பார்த்துக் கொண்டே கோவிலை அடைந்தோம். முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே ஒரு கடையில் பிரசாதம் வாங்கிக் கொண்டு அக்கடையில் இருக்கும் படிகள் வழியே கோவில் பாதைக்குச் சென்றோம். சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலை அடைந்தோம். நேற்றைய இரவினை விட இன்று மக்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமிருந்தது. ஆனாலும் தள்ளுமுள்ளு இல்லாமல், “ஜருகண்டி, ஜருகண்டி” என்று தள்ளாததாலும் நிம்மதியாய் தேவியை தரிசித்தோம்.

 

நாங்கள் கோவிலுக்கு வந்துவிட்டாலும் நிகழ்ச்சி [லலிதா சஹஸ்ரநாம பாராயணம்] ஏற்பாடு செய்தவர்கள் இன்னமும் வந்து சேரவில்லை. Indian Punctuality! அதனால் கோவிலிலேயே காத்திருந்தோம்.  கேமராவிற்குத் தீனி போட நிறைய குழந்தைகள் அங்கே இருக்க, ஒவ்வொருவராய் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். தவிர வேறு சில காட்சிகளும் காணக் கிடைத்தன.

 

பெரிய குங்குமப் பொட்டுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அங்கே இருக்கும் பல பெண்கள் அவரது காலடியில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வப்போது குங்குமப் பொட்டு பெண்மணி அப்பெண்களின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார். கீழே அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி திடீரென தனது கைகளையும் பின்னால் கொண்டு சென்று முடித்திருந்த கூந்தலை அவிழ்த்து அன்னியன் போல ஆனார். தனது கைகள் இரண்டையும் தரையில் தட்டி ஒரு சாமியாட்டம். சில நொடிகளில் மீண்டும் கூந்தலை அள்ளி முடிந்து ஒரு மந்தகாசப் புன்னகை. இது அடிக்கடி நடந்தது. சாமியாடிகள் எல்லா இடங்களிலும் உண்டு போலும்!

 

அங்கே நடந்த வேறொரு திருவிளையாடலும் படக்காட்சிகளாக வைத்திருந்தார்கள். அப்பகுதியின் ராஜா-ராணி. அவர்களுக்கு ஒரே ஒரு புதல்வன்.  ஒரு நாள் மந்திரி சபைக்கு இரு சாதுக்கள் வருகிறார்கள். அவர்களுடன் ஒரு புலியும் வருகிறது. புலிக்கு பயங்கர பசி – நர மாமிசம் வேண்டும் என்று சாதுக்கள் சொல்ல, தன்னையே தர விழைகிறார் ராஜா.  இல்லை வேண்டாம் என சாதுக்கள் மறுக்க, ராணி தன்னைத் தர முன் வருகிறார்.

 

இரண்டு பேரையும் மறுத்துவிட, தனது ஒரே ஒரு மகனை புலிக்கு இரையாகத் தர சம்மதிக்கிறார்கள் ராஜாவும் ராணியும். சாதுக்களும் இதற்கு சம்மதிக்க, ராஜாவும் ராணியும் தன் மகனின் தலை மீது ஒரு பெரிய ரம்பம் வைத்து மகனை புலிக்குத் தர ஆயத்தமாகிறார்கள்.  மாதா சிந்த்பூர்ணி அங்கே அவர்கள் மூவரின் மீதும் பூக்களைப் பொழிந்து ”உம் பக்தியோடு விளையாடவே யாம் வந்தோம்” என்று திருவிளையாடல் சிவாஜி மாதிரி குரல் கொடுத்து அவர்களை ஆசிர்வதிக்கிறார்.

 

இப்படியாக கோவிலில் இருக்கும் பக்தர்களையும், நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருக்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களும் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்கள். அடுத்தது அவர்கள் பக்தியில் திளைத்திருக்க, நான் புகைப்படங்கள் எடுப்பதிலும், ஓய்வு எடுப்பதிலும் மும்மரமானேன்.  பிற்கு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா!

 

தொடர்ந்து பயணிப்போம்……

Feedback/Errata

Comments are closed.