8 பகுதி 8: இசையும் நடனமும்

 

ஒரு வழியாக நிகழ்ச்சியை நடத்தும் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட, நாங்களும் எங்களால் ஆன உதவிகளைச் செய்தோம். எல்லோரும் சேர்ந்து பணி புரிவது நல்லது தானே. அப்போது தானே நிகழ்ச்சியும் எவ்வித தடையும் இன்றி காலாகாலத்தில் முடிவடையும். ஒரு பெரியவரும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள். மனைவி, தனது கணவரிடம் அலைபேசி மூலம் புகைப்படம் எடுக்கச் சொல்ல அவர் தடுமாறினார். பக்கத்தில் இருந்த என்னைப் பார்த்து, அந்த பெண்மணி, “மகனே, அவருக்கு ஒண்ணும் தெரிவதில்லை! நீ கொஞ்சம் கற்றுக்கொடு….” எனச் சொல்ல, அவருக்கு அலைபேசி மூலம் புகைப்படம் எடுக்கச் சொல்லிக் கொடுத்தேன். அப்படியே எனது கேமராவிலும் ஒரு படம் எடுத்தேன்.

 

முழுவதும் பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எங்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. ஆரம்பித்த பிறகு அங்கே சுற்றிக் கொண்டிருப்பது சரியல்ல என்பதால், வெளியே, குளிருக்கு இதமாய் வெயிலில் அமர்ந்து கொண்டோம். சில சிறுவர்களும் அங்கே அமர்ந்து கொள்ள, பொழுது போனது.  அது தவிர பெரும்பாலான வட இந்தியக் கோவில்களில் ஷெஹனாய் இசையும் கூடவே தபலா போன்ற மேளமும் வாசிப்பார்கள்.

 

அவர்களுக்கு காசு கொடுக்க, நம் பெயரை உரக்கச் சொல்லி தேவியிடம் இன்னாருக்கு நல்லதையே கொடு என வேண்டிக் கொள்வார்கள்.  இசை, தாளம் என்றாலே வட இந்தியர்களுக்கு கொண்டாட்டம் தான். உடனே ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். இங்கேயும் இப்படித்தான். ஒரு வட இந்தியர் இசையைக் கேட்டவுடன், ஆட ஆரம்பித்து விட்டார். ஆடி முடித்து இசைக் கலைஞர்களுக்கு கொஞ்சம் காசும் கொடுத்து விட்டுத் தான் நகர்ந்தார்.

 

கோவில் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் பலவிதக் கயிறுகள் கட்டி இருந்தன.  தங்களுக்குத் தேவையானவற்றை மனதில் வேண்டிக் கொண்டு இப்படி கயிறு கட்டி வைக்கிறார்கள்.  இது தவிர கோவிலுக்கு ஆடுகளையும் நேர்ந்து விடுகிறார்கள்.  அதை கோவிலில் பலியிடுவதில்லை என்றாலும் அது, எங்கே, எப்படி, சென்று சேரும் என்பது தேவிக்கே வெளிச்சம்.

 

தொடர்ந்து பூஜை நடந்து கொண்டிருக்க, நானும் இன்னும் சிலரும் தங்குமிடத்திற்கு வந்து அறைகளை காலி செய்து கொண்டு அடுத்த பயணத்தினைத் துவங்க ஏற்பாடுகள் செய்யலாம் என முடிவு செய்தோம். வரும் வழியில் மீண்டும் சாலைக் காட்சிகள். இப்போது மக்கள் வருகை இன்னமும் அதிகரித்து இருந்தது என்றாலும் நவராத்திரி சமயம் போல அத்தனை கூட்டம் இல்லை. கடைகளில் விற்பனையும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. கடைகளில் வித்தியாசமான வகையில் இருந்த பொருட்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.

 

வழியில் ஒரு சிறுவன் – ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம் – தாடி மீசை போன்றவற்றை ஒட்டிக்கொண்டு ”ஒட்டு தாடி, மீசை” விற்பனை செய்து கொண்டிருந்தான். இரண்டும் சேர்த்து 20 ரூபாயோ 25 ரூபாயோ. அவனை தாடி மீசையோடு புகைப்படம் எடுக்க முயல, தனது முகத்தினை மறைத்துக் கொண்டான் – “முதல்ல ஒரு தாடி-மீசை வாங்குய்யா! அதை விட்டு புகைப்படம் எடுப்பதில் எனக்கென்ன லாபம்?” என்று சொல்வது போல இருந்தது! வேறு ஒரு சிறுவனும் இப்படி விற்றுக் கொண்டிருக்க, அச்சிறுவனின் புகைப்படம் எடுத்தேன்.

 

ஒரு பெரியவர் பட்டாணி, வேர்க்கடலை போன்றவற்றை விற்றுக் கொண்டிருந்தார். இந்த மூத்த வயதிலும் உழைக்கும் அவருக்கு ஒரு சல்யூட். கொஞ்சம் வேர்க்கடலை வாங்கிக் கொண்டோம்.  எங்களுடன் வந்திருந்த பெண்களில் ஒருவர் பானி பூரி கேட்க, அதை அவருக்கு வாங்கிக் கொடுத்தோம். பக்கத்திலேயே ஒரு பழம் – பெயர் அமர்ஃபல் என்று சொன்னார். நன்றாகத் தான் இருந்தது. கூடவே கொஞ்சம் காலா நமக் போட்டு இலந்தைப் பழம். இப்படியே கொரித்துக் கொண்டே கடைவீதியில் வேடிக்கைப் பார்த்டபடியே தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.

 

காலையிலேயே உடமைகளை அவரவர் பைகளில் வைத்து விட்டபடியால், தங்குமிடத்திற்கான கட்டணத்தைக் கட்டி அங்கிருந்து காலி செய்தோம். பக்கத்திலேயே தான் தில்லியிலிருந்து நாங்கள் எடுத்துச் சென்ற வாகனம் நின்றிருக்க அதிலே எல்லாவற்றையும் வைத்தோம். பக்கத்திலே இருக்கும் உணவகத்தில் அமர்ந்து கொண்டு மதிய உணவு என்ன இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தோம். பூஜை முடிந்து மற்றவர்கள் வரட்டும். அதற்குள் நாம் சாப்பிடலாம் என பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த போது அலைபேசியில் அழைப்பு!

 

“சாப்பிட வேண்டாம். நாங்களும் வந்த பிறகு சாப்பிடப் போகலாம்!” என்று மிரட்டல்! சரி என்னவென்று வந்த பின் கேட்டுக் கொள்ளலாம் என அங்கிருந்து வெளியே வந்தோம். அந்த உணவகத்தின் பணியாளர்கள் நிச்சயம் எங்களை திட்டியிருக்கக் கூடும்! எத்தனை எத்தனை கேள்விகள் கேட்டு அவர்களை படுத்தி இருப்போம்!

 

அப்படி படுத்தியதற்கு எங்களுக்கு அன்றே பலன் கிடைத்தது! அது என்ன என்று அடுத்த பதிவில் பார்க்கலாமே!

 

தொடர்ந்து பயணிப்போம்……

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

பகுதி 8: இசையும் நடனமும் by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.