="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

9 பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்

 

 

எங்கள் குழுவினர் அனைவரும் கோவிலில் இருந்து வரக் காத்திருந்தோம். அனைவரும் வந்த பிறகு சொன்னது இது தான் – “நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கிருந்து 10-12 கிலோ மீட்டர் பயணித்தால் தில்லி போகும் சாலையில் இருக்கும் பாம்பே பிக்னிக் ஸ்பாட் வரும் – அங்கே தான் எல்லோருக்கும் மதிய உணவு என்று சொன்னார்கள். பாருங்க, மதிய உணவிற்காக, சிந்த்பூர்ணியிலேயே தில்லி, பாம்பே என ஓட வைத்துவிட்டார்கள்! இதுக்குத் தான் யாரையும் ரொம்ப படுத்தக் கூடாதுன்னு பெரியவங்க சொல்றாங்க! 🙂

 

பாம்பே பிக்னிக் ஸ்பாட் நோக்கி அனைவரும் பயணித்தோம். வழியெங்கும் நம் முன்னோர்களின் கூட்டம். அவர்களுக்கு சில பழங்களைப் போட ஜாண்டி ரோட்ஸ் மாதிரி தாவித் தாவி மிகச்சரியாக பிடித்தார்கள். வண்டியை கொஞ்சம் நிறுத்தி அவர்களைப் படம் பிடிக்கலாம் என்றால் உள்ளே வந்து விடுவார்கள் எனத் தோன்றியது. எதற்கு வம்பு என பழங்களை போட்டுக் கொண்டே பாம்பே சென்றடைந்தோம்…. அதாங்க பாம்பே பிக்னிக் ஸ்பாட் சென்றடைந்தோம்.

 

நாங்கள் சென்று சேர்ந்த பொழுதே நீண்ட வரிசை அங்கே. பஃபே முறையில் தான் உணவு வழங்குகிறார்கள். உணவு உண்ணுமிடம் சிறிய அளவிலிருந்ததால் பத்து பத்து பேராகத் தான் உள்ளே அனுமதி கொடுக்கிறார்கள். அதனால் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் தான் எங்கள் முறை வந்தது. புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான், மூன்று நான்கு சப்ஜிகள் என மெனு. ஒவ்வொருவராக உள்ளே சென்று வேண்டிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டு நின்றபடியே உண்டோம்.

 

இந்த பஃபே முறையில் சாப்பிடுவது ஒரு பெரிய  கலை! ஒரு கையில் தட்டை வைத்துக் கொண்டு மற்றொரு கையால் சுக்கா ரொட்டியை சிறு துண்டுகளாக்கி சப்ஜியோடு சேர்த்து சாப்பிட நிறைய வித்தைகள் செய்ய வேண்டும்.  கரணம் தப்பினால் மரணம் என்பது இங்கும் பொருந்தும். கொஞ்சம் தவறினாலும் ரொட்டி கீழே விழும். இல்லையெனில் தட்டு சாய்ந்து சப்ஜி உங்கள் உடையிலோ, பக்கத்திலிருக்கும் நபரின் உடையிலோ படும். தட்டை வைத்துக் கொண்டு நீங்கள் திரும்பும் நேரம் பார்த்து தான் ஒருவர் அவசர அவசரமாக பாத்திரத்தினை நோக்கி அடுத்த Helping-க்காக வருவார்! தட்டு பறக்கும்!

 

அதிலும் சிலர் தட்டு முழுவதும் நிரப்பிக் கொள்வார்கள் – எல்லா சப்ஜியும், வேண்டுமோ வேண்டாமோ என யோசிக்காமல் அனைத்திலும் கொஞ்சம் எடுத்து அந்த சிறிய தட்டில் போட்டுக்கொள்ள அங்கே ஒரு சங்கமம் நடக்கும் – அலஹாபாத்தில் திரிவேணி சங்கமம் தான் – ஆனால் இங்கே நடக்கும் சங்கமத்தில் கலக்கும் சப்ஜிகள/உணவு வகைகள் பத்து பன்னிரெண்டு தாண்டும்! இப்படியாக கலந்து கட்டி சாப்பிட்டு, முழுவதும் சாப்பிட முடியாமல் அதை அப்படியே வீணாக்குவார்கள். பார்க்கும் போதே நமக்கு பதறும்…. எத்தனை எத்தனை பேருக்கு உணவு கிடைப்பதில்லை, கிடைக்கும் உணவினை இப்படி வீணாக்குகிறார்களே என நெஞ்சு துடிக்கும். பொதுவாகவே இப்படி இருக்கும் இடங்களில் மிகவும் குறைவாகத் தான், தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது என்பது மக்களுக்கு எப்போது தான் புரியுமோ…..

 

அந்த இடத்தில் நெடுஞ்சாலைப் பயணிகள் உணவு உண்பது மட்டுமன்றி சற்றே இளைப்பாறவும், சிறுவர்கள் விளையாட ஏதுவாய் சில ஏற்பாடுகளும் இருந்தது. ஒட்டக சவாரி செய்யும் வசதிகளும், செயற்கை குளங்களில் படகுக் சவாரி செய்யவும், கிரிக்கெட் விளையாடும் [Bowling Machine பந்து போட நீங்கள் விளையாடலாம்] வசதியும் [Net Practice] இருந்தது. அதையெல்லாம் சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு எங்கள் அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்தோம்.

 

அடுத்த இலக்கும் மலைப்பகுதியில் தான் அதுவும் சற்றே வளைவு நெளிவான பாதை. மாலை நேரமும் நெருங்கி வரவே குளிர் கொஞ்சம் அதிகமாக ஆரம்பித்திருந்தது. மலைப்பாதையில் சாலைகள் ஆங்காங்கே சரியில்லாதிருக்க, அதை சரி செய்ய பணியாளர்கள் இருந்தார்கள். வாகனத்திற்குள் கண்ணாடிக் கதவுகளை அடைத்து பயணிக்கும் எங்களுக்கே குளிர் தெரிந்த போது அவர்களுக்கு குளிர் அதிகமாகவே தெரியும்.  ஒரு சில பணியாளர்கள் காய்ந்த விறகுகளைப் போட்டு தீயிட்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள்.

 

எத்தனை கடினமான பணி என்றாலும் வேலை செய்யத் தானே வேண்டும். செய்வது எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்குத் தானே…. குளிராக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் வேலை செய்து தான் ஆக வேண்டும். அவர்களைத் தாண்டி எங்கள் வழியில் மேலே சென்றபோது, இலைகளில்லாது பார்த்த ஒரு மரம் இவர்களை நினைவு படுத்தியது. எத்தனை தொல்லைகள் வந்தாலும் வாழ்ந்தே தீருவோம் என்ற அந்த மரமும் அம்மனிதர்களும் சொல்வது போல எனக்குத் தோன்றியது.

 

இப்படியாக பயணம் செய்து நாங்கள் அடைந்த இடம் என்ன? அங்கே என்ன சிறப்பு என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

 

தொடர்ந்து பயணிப்போம்……

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான் by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.