11

சென்ற பகுதியில் பார்த்தது போல ஜ்வாலாஜி கோவிலில் ஒரு உன்னதமான அனுபவத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் புறப்படும் போதே நேரம் இரவு 08 மணிக்கு மேலாகி விட்டது. ஜ்வாலாஜி இருக்கும் இடத்திலிருந்து அன்றைய இரவு நாங்கள் தங்க வேண்டிய இடமான காங்க்டா [Kangra] சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு.  இரவு நேரம் என்பதால் சற்றே மெதுவாகத் தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கூடவே மலைப் பிரதேசம் என்பதால் வேகமாக பயணிக்க இயலாது.

 

இரவு நாங்கள் அங்கே தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, அலுவலக நண்பரின் உறவினரிடம் சொல்லி இருந்தோம். இவர் தான் எங்களின் முதல் நாள் இரவு தங்கிய இடமான சிந்த்பூர்ணியிலும் தங்குமிடம் ஏற்பாடு செய்தவர். நாங்கள் காங்க்டா வரும்வரை தொடர்ந்து அலைபேசியில் அழைத்து எங்கே இருக்கிறோம் என்பதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். காங்க்டா நகரில் நுழைந்தவுடன் இருக்கும் ஒரு பிரதானமான இடத்தினைச் சொல்லி அங்கே காத்திருப்பதாகவும் சொன்னார்.  ஒரு வழியாக நாங்கள் அந்த இடத்தினை அடைந்தோம்.

 

அங்கே சேர்ந்தபிறகு அவரை அலைபேசியில் அழைக்க, சில நிமிடங்களுக்குள் தனது வாகனத்தில் வந்து சேர்ந்தார். அவருடைய வாகனத்தினைத் தொடர்ந்து நாங்களும் பயணித்து அவர் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். கீழே ஐந்து அறைகள், மேலேயும் தங்கும் அறைகள் என ஒரு இடம் – பெயர் Anmol Guest House.  காங்க்டா தேவி கோவில் இருக்கும் கடை வீதியிலேயே இருக்கிறது. அங்கே சென்று எங்கள் உடைமைகளை வைத்து விட்டு சற்றே இளைப்பாறினோம்.

 

அதற்குள் அந்த நண்பர், அவர் பெயர் மனிஷ் – இரவு உணவு எங்கே சாப்பிடப் போகலாம் என்று கேட்க ஆரம்பித்தார்.  மதியம் சாப்பிட்டிருந்தாலும், முந்தைய பதிவில் சொன்னது போல, நாலு மணிக்கு சாப்பிட்டிருந்தாலும், பயணத்திற்குப் பிறகு சிலருக்கு பசி இருந்தது. சிலருக்கு பயணத்தின் அலுப்பில் ”படுத்தால் போதும் போல இருக்கிறது, அதனால் நாங்கள் பழங்கள் சாப்பிட்டுக் கொள்கிறோம்” எனச் சொல்ல, சிலர் மட்டும் சாப்பிடப் புறப்பட்டோம் – அப்போது மணி இரவு 09.45 மணிக்கு மேல்!

 

மனீஷ் உடனேயே அவரது நண்பரின் உணவகத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, உணவு சாப்பிட எங்களை அழைத்து வருவதாகச் சொல்லி விட்டார். அப்பப்பா, அப்படி ஒரு கவனிப்பு, ஆட்டமும் ஓட்டமுமாக மனிஷ் எங்களை கவனிக்க, நாங்களும் அவரது அன்பில் திளைத்தோம். மனீஷையும் எங்களுடன் சாப்பிடச் சொல்ல, அவரோ, வீட்டில் மனைவி காத்திருப்பார் [சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் ஆனதாம்!] என்று சொல்ல, ”எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம், நீங்கள் புறப்படுங்கள், காலையில் சந்திக்கலாம்” என்று வலுக்கட்டாயமாக அனுப்பினோம்.

 

நாங்கள் உணவு சாப்பிட்டு முடித்தபிறகு உணவுக்கான தொகையைக் கொடுக்கலாம் எனக் கேட்டபோது, கடை உரிமையாளர், எங்களிடம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார் – மனீஷ் ஏற்கனவே அவரிடம் சொல்லி விட்டாராம் – வாங்கக் கூடாது என! நன்கு உண்ட பிறகு அதற்கான தொகையைக் கொடுக்கவில்லையே என நினைத்த போது மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கடை உரிமையாளருக்கும் நன்றி சொல்லி, நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு நடந்தே திரும்பினோம்.

 

காங்க்டாவில் நாங்கள் தங்கி இருந்த போதும், நாங்கள் பயணித்த போதும், மனீஷ் எங்களுக்குச் செய்த உதவிகள் என்றும் மறக்கமுடியாதவை. தொடர்ந்து அவர் ஓட்டமும் நடையுமாக பல ஏற்பாடுகளை எங்களுக்காக செய்து கொடுத்தார். இத்தனைக்கும் நாங்கள் அவரை முன்னரே பார்த்ததோ, அறிந்ததோ இல்லை. அவரின் உறவினர் எங்களுடன் அலுவலகத்தில் ஒன்றாக பணி புரிந்தவர் [அதுவும் சில வருடங்களுக்கு முன்னர்!].  அவர் சொல்லி விட்டார் என்பதற்காக, அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

 

அவரிடம் பேசியபோது ஒரு விஷயத்தினைத் தெரிந்து கொண்டோம். அவரது மனைவியின் ஊர் தலைநகர் தில்லி தானாம். அவ்வப்போது தில்லி வருவேன் என்று சொல்ல, எப்போது தில்லி வந்தாலும் சொல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டோம்! இந்த மாதிரி பயணங்களில் நமக்குக் கிடைக்கும் நட்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விடுகிறது.

 

இரவு உணவினை முடித்துக் கொண்டு விடுதிக்குத் திரும்பி, படுத்துக் கொண்டு, அன்றைய தினத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை நினைத்தபடியே கிடக்க, சிறிது நேரத்திலேயே நித்ரா தேவி என்னை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றாள்…….  சரி நான் கொஞ்சம் தூங்கி எழுந்து கொள்கிறேன்! அடுத்த நாள் என்ன இடங்களுக்குச் சென்றோம், என்னென்ன அனுபவங்கள் என அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

 

தொடர்ந்து பயணிப்போம்……

License

Share This Book