15

சென்ற பகுதியில் சொன்னது போல, வஜ்ரேஷ்வரி தேவியின் திவ்யமான தரிசனம் முடித்துக் கொண்டு வெளியே வந்தோம்.  காலை வேளையில் கோவில் சென்று வருவதில் மனதிற்கு ஒரு அமைதி கிடைப்பது நிஜம். மனதில் ஒரு வித திருப்தியுடன் தங்குமிடத்திற்கு திரும்பி அன்றைய தினத்திற்கான பயணத்தினை துவங்கினோம்.  பயணம் தொடங்குவதற்கு முன்னரே காலை உணவினை முடித்துக் கொண்டு விடலாம் என மனீஷ் சொல்ல, பசித்திருந்த எங்களுக்கும் அது சரியென பட்டது.

 

ஹிமாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாது வட இந்தியாவில் பெரும்பாலான கடைகள்/உணவகங்கள் காலை நேரத்தில் திறப்பதில்லை. மதிய வேளையில் தான் திறப்பார்கள்.  ஒன்றிரண்டு இடங்களே திறக்கிறார்கள். அங்கேயும் பராட்டாவோ, அல்லது Bread-ஓ தான் கிடைக்கும். காங்க்ராவும் விதிவிலக்கல்ல. நமது ஊரில் மாலை நேரங்களில் முளைக்கும் சாலை ஓர உணவகங்கள் போலவே அங்கேயும் சில உண்டு. அவற்றில் காலை நேரங்களில் “நான்” அல்லது பராட்டாக்கள் கிடைக்கும்.

 

அது மாதிரி ஒரு கையேந்தி பவனில் காலை உணவு சாப்பிடுவதில் ஆட்சேபனை இருக்கிறதா எனக் கேட்க, அங்கே சென்று பார்க்கலாம் என முடிவு செய்தோம். தங்குமிடத்திலிருந்து சற்றே தொலைவில், நடக்கும் தூரத்தில் தான் நண்பர் மனீஷுக்குத் தெரிந்தவரின் கையேந்தி பவன் இருக்கிறது என அங்கே எங்களை அழைத்துச் சென்றார்.  காலை நேரத்திலேயே காய்கறிக் கடைகள் திறந்திருக்க, அவற்றில் குளிர்கால காய்கறிகள் குடைமிளகாய், கேரட், முள்ளங்கி, காலிஃப்ளவர் என நிறைந்திருந்தன. அவற்றையெல்லாம் பார்த்தபடியே நடந்து கையேந்தி பவனை அடைந்தோம்.

 

காலை நேரத்திலேயே கடை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தள்ளு வண்டியின் ஒரு பக்கத்தில் “தந்தூர்” என அழைக்கப்படும் அடுப்பு – பெரும்பாலும் மண்ணிலே செய்திருப்பார்கள். இந்த மாதிரி தள்ளு வண்டிகளில் தந்தூரில் சற்றே சில மாற்றங்கள் இருக்கும். ஒரு பெரிய இரும்பு Drum-ல் உட்புறங்களில் மண் குழைத்துப் பூசி தந்தூர்-ஆக மாற்றம் செய்திருப்பார்கள்.

 

அந்த மாதிரி தந்தூர் அடுப்பில் சுடச் சுட தந்தூரி பராட்டா – சாதாரணமாக தவாவில் [தோசைக்கல்] பராட்டா செய்தாலே கொஞ்சம் தடிமனாக இருக்கும். இந்த தந்தூரில் செய்யும் பராட்டாக்கள் இன்னும் அதிக தடிமனாக இருக்கும். இரண்டு தந்தூரி பராட்டாக்கள் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். அதிலும் பராட்டாவில் வெண்ணையைத் தடவித் தரும்போது நல்ல நிறைவான உணவாக இருக்கும்.

 

பெரும்பாலான வட இந்திய கையேந்தி பவன்களில் சுத்தம் இருக்காது – “சுத்தமா? அது கிலோ எவ்வளவு?” என்ற வகையில் தான் இருக்கும். ஆனால் இந்த கையேந்தி பவன் கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. மனீஷ் விறுவிறுவென தட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாகத் துடைத்து புதினா-கொத்தமல்லி சட்னி, வெங்காயம், ஊறுகாய், கொஞ்சம் அமுல் வெண்ணை என தட்டின் ஒவ்வொரு குழிகளிலும் வகைக்கு ஒன்றாக போட்டு தயார் செய்ய, சுடச் சுட பராட்டாக்களை தயார் செய்தார் அந்த கையேந்தி பவன் உரிமையாளர்.

 

அவரது கைகளில் என்னவொரு வேகம் – பொதுவாக வட இந்தியர்கள் சப்பாத்தி, பராட்டா ஆகியவற்றை குழவி கொண்டு செய்வதில்லை. கைகளால் தட்டித் தட்டியே பெரிதாக்கி விடுவார்கள். முதன் முதலில் இப்படிப் பார்த்தபோது அதிசயமாகத் தான் இருந்தது.  இப்போதெல்லாம் அதிசயம் இல்லை. நானே கூட அப்படி முயற்சித்து செய்ததுண்டு! கிடுகிடுவென பராட்டாக்களை அவர் தயார் செய்ய, ஒவ்வொன்றாக தட்டுகளில் போட்டுக் கொடுத்தபடியே இருந்தார் மனீஷ்.

 

கையேந்தி பவனில் சாப்பிட வேண்டுமா எனக் கொஞ்சம் தயக்கத்துடன் இருந்தவர்களும் முதல் தந்தூரி பராட்டாவினை உண்ட பிறகு இன்னும் ஒரு பராட்டா கூடச் சாப்பிடலாம் என சாப்பிட்டோம்.  சுடச் சுட அந்த கடை உரிமையாளர் தயார் செய்து கொடுக்க, சுவையான தொட்டுக்கைகள் இருக்க, மளமளவென பராட்டாக்களை கபளீகரம் செய்தோம். எல்லோரும் சாப்பிட்ட பிறகு உணவிற்கான தொகையைக் கேட்க, கடை உரிமையாளர் வாங்கிக் கொள்ள மறுத்தார் – மனீஷ் அழைத்து வந்ததால் எங்களிடம் வாங்கிக் கொள்ள மாட்டாராம்….  அட தேவுடா!

 

இந்தக் கையேந்தி பவன்களில் விதம் விதமான பராட்டாக்களும், அம்ருத்ஸரி நான் வகைகளும், தந்தூரி ரொட்டிகளும் வகை வகையாக செய்து தருகிறார்கள். பலரும் அந்தக் கடைகளில் சாப்பிடுகிறார்கள். சுத்தமாக இருப்பதால் நல்ல விற்பனை ஆகிறது. காலை நேரத்திலேயே இப்படிச் சுடச் சுட பராட்டாக்களை சாப்பிட்டு விட்டதால் தொடர்ந்து பயணிப்பதில் கஷ்டமில்லை.

 

ஓட்டுனர் ஜோதியும் அதற்குள் காலை உணவினை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு அங்கேயே வந்து விட அனைவரும் புறப்பட்டோம். எதிரே தௌலாதர் மலைத்தொடர் இருக்க, பனியில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் பட்டுப் பளபளக்க, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணித்தோம். நாங்கள் பயணித்துச் சென்ற இடம் என்ன, அங்கே பார்த்தவை என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

 

தொடர்ந்து பயணிப்போம்….

License

Share This Book