17

சாமுண்டா தேவியின் தரிசனத்திற்குப் பிறகு வெளியே வர அங்கே இருந்த பக்தர்கள் பலரும் வேறொரு சன்னதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அங்கே என்ன சன்னதி இருக்கிறது என்று தெரியாமலே நாங்களும் சென்றோம். அங்கு சென்ற பிறகு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. ஒரு சிறிய குகை – வாயில் மூன்று அல்லது மூன்றரை அடி தான் இருக்கும். சிறுவர்கள் உள்ளே நுழைவதென்றால் கூட சற்றே குனிந்து தான் செல்ல வேண்டியிருக்கும்.

 

இப்படி இருக்கையில் ஆறு அடிக்கு மேல் இருக்கும் என்னைப் போன்றவர்கள் உள்ளே செல்ல வேண்டுமானால்?  உள்ளே சில படிகள் இருக்க, அதில் ஒவ்வொரு படிகளாக உட்கார்ந்து தான் செல்ல வேண்டும். உள்ளே ஒருவர் செல்ல, இருக்கும் இடைவெளியில் உள்ளிருப்பவர் வெளியே வர வேண்டும். ஒவ்வொருவராகத் தான் உள்ளே செல்ல முடியும். படிகளில் உட்கார்ந்து உட்கார்ந்து உள்ளே நுழைந்தால், கோவிலில் இரண்டு பூஜாரி அங்கே தரையில், பக்கத்துக்கு ஒருவராக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

கடைசிப் படிக்கட்டின் அருகில் நானும் அமர்ந்து கொண்டு, லிங்க ஸ்வரூபமாக இருக்கும் சிவபெருமானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். பெரும்பாலான வட இந்திய கோவில்களில் கடவுள் சிலைகளை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. நாமே கடவுள் சிலைக்கும் பூக்களைப் போட்டு தொட்டு வணங்கலாம். இங்கேயும் அப்படியே. சில நிமிடங்கள் இன்னும் அங்கே இருக்கலாம் என்றால் படியில் அமர்ந்திருக்கும் அடுத்தவருக்கு தரிசனம் கிடைப்பது கடினம். அதனால் வெளியே வர ஆயத்தமானேன்.

 

உள்ளே நுழையும்போது படிக்கட்டுகளில் உட்கார்ந்து உட்கார்ந்து செல்ல முடிந்தாலும் வெளியேறும் போது கிட்டத்தட்ட தவழ்ந்து தான் வர வேண்டியிருந்தது. பொதுவாக அடங்காத உடம்பு கூட இங்கே வேறு வழியின்றி கூனிக் குறுகி தான் வெளியேற வேண்டியிருக்கிறது! வெளியே வந்து நேராக நின்றபிறகு தான் உயரமாக இருப்பது எவ்வளவு கடினம் என்று உணர்ந்தேன்! குகைக்குள் அமர்ந்து கொண்டே இருக்கும் அந்த பூஜாரிகளுக்கு எப்படி இருக்கும்! தினம் தினம் அப்படி அமர்ந்து சென்று தவழ்ந்து வருவது பழகி இருக்கும் என்பதால் சுலபமாக இருக்கும் போல!

 

இப்படி சாமுண்டா தேவி மற்றும் குகைக்குள் இருந்த சிவன் ஆகிய இருவரையும் தரிசித்து, குழுவில் உள்ள அனைவரும் மெதுவாக கோவில் வளாகத்தில் இருக்கும் சிலைகளையும் காட்சிகளையும் பார்த்தபடியே வெளியே வந்தோம். பானேர் [பான் கங்கா என்றும் சொல்வதுண்டு!] ஆற்றில் அத்தனை தண்ணீர் இல்லை. குளிர் காலம் என்பதால் மலைகளில் பனியாக இருக்கிறது போலும்! பனி உருகி தான் இங்கே தண்ணீர் வர வேண்டும் போல.

 

இந்த கோவில் அருகிலேயே ஒரு மயானமும் இருக்கிறது என்பதை ஹிமாச்சலப் பிரதேச நண்பர் ஒருவர் சொன்னார். சுற்று வட்டாரத்தில் இருக்கும் 22 கிராமங்களுக்கும் இங்கே தான் மயானம் என்றும் சிவபெருமான் தான் இங்கே முக்கியமான கடவுள் என்றும் சொன்னார். சிவ பெருமானை இங்கே வழிபடுவது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. சுற்றி இருக்கும் கிராமத்து மக்கள் அனைவரும் இங்கே சிவராத்திரி சமயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்வார்கள் என்றும் மேளாக்கள் நடைபெறும் என்றும் கூடுதல் தகவல்கள் தந்தார்.

 

கோவில் சற்றே பெரிய கோவில் என்பதாலும், நவராத்திரி சமயங்களிலும், விழாக் காலங்களிலும் நிறைய பக்தர்கள் வருவார்கள் என்பதால் தடுப்புக் கம்பிகள் வைத்து நிறைய தூரத்திற்கு பாதை அமைத்திருக்கிறார்கள். அவற்றின் வழியே வெளியே வந்தோம். கோவில் வளாகத்திற்குள்ளாகவே ஒருவர் ஒரு நீண்ட குழாய் போன்ற அமைப்பில் ஏதோ வைத்து விற்றுக் கொண்டிருக்க என்னவென்று கேட்டேன்.

 

இயற்கை முறையில் தயாரிக்கும் ஐஸ்க்ரீம் என்று சொல்ல, சரி சாப்பிட்டுப் பார்க்கலாம் என தரச் சொன்னேன். ஒரு சிறிய இலையில் கொஞ்சம் எடுத்து வைத்து அதைத் துண்டுகளாகப் போட்டு எடுத்து சாப்பிட இன்னுமொரு இலையையே ஸ்பூனாகச் செய்து கொடுத்தார். பத்து ரூபாய்க்கு சில துண்டுகள்.  இரண்டு மூன்று இலைகளில் வாங்கி அனைவரும் சுவைத்துப் பார்த்தோம்.  நன்றாகவே இருந்தது.

 

இப்படி ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்டிருந்தபோதே அங்கு இன்னுமொரு காட்சியும், சில புகைப்படங்கள் எடுக்க ஒரு வாய்ப்பும் காணக்கிடைத்தது! அப்படி என்ன அனுபவம்? அந்த காட்சியைப் புகைப்படம் எடுக்க என்ன கஷ்டப் பட வேண்டியிருந்தது என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாமா!

 

தொடர்ந்து பயணிப்போம்….

License

Share This Book