18

தேவி மற்றும் லிங்க ஸ்வரூப சிவனின் தரிசனமும் கண்டு அங்கிருந்து வெளியே வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டது பற்றி சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு மூதாட்டி மிகவும் ஸ்வாரசியமாக, அனுபவித்து பீடியை வாயில் வைத்து இழுத்து, புகை விட்டுக் கொண்டிருந்தார்.  அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்களும், பற்கள் இல்லாது புகை இழுப்பதில் அவரது கன்னங்களில் ஏற்பட்ட பள்ளங்களும் அவரை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.

 

சரி அவரை புகைப்படம் எடுக்கலாம் என்றால் தெரியாத ஒருவரை, அதுவும் வேறொரு ஊரில் சுற்றுலா சென்றிருக்கும் போது அந்த ஊரில் இருப்பவரை புகைப்படம் எடுப்பதில் சில தொந்தரவுகள் வரலாம் என்பதால், ஒன்று அவரைக் கேட்ட பிறகு அவரது புகைப்படம் எடுக்க வேண்டும், அல்லது அவருக்குத் தெரியாமல் அவரது புகைப்படம் எடுக்க வேண்டும். அவரைக் கேட்டு அவரிடமிருந்து அனுமதி பெற்று புகைப்படம் எடுப்பது சாத்தியமல்ல என்று தோன்றியது.

 

பீடி பிடிக்கும் விதமும், அவர் இருந்த ஒரு மயக்க நிலையும், அவர் அவரது சுய நினைவில் இருப்பது போலத் தோன்றவில்லை. மேலும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, ஏதோ பேசவும் செய்தார்.  நடுநடுவே, பீடியை வாயில் வைத்து, “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என சார்மினார் சிகரெட் விளம்பரம் போல ஒரு நீண்ட இழுப்பு – அதன் பின்னர் புகையை சில வினாடிகள் உள்ளிருத்தி, நன்கு அனுபவித்த பிறகு, மேலே பார்த்தபடி, அபரீதமான ஒரு திருப்தியோடு புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தார்.

 

கேமராவில் பொருத்தியிருந்த 18-55 லென்ஸை மாற்றி 55-250 லென்ஸ் பொருத்தி, சற்று தொலைவிலிருந்து, அவருக்குத் தெரியாமல் அவரைப் புகைப்படம் எடுக்கலாம் என முடிவு செய்தேன். அவரது பக்கத்திலேயே எங்கள் குழுவினர் சிலரும் நின்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்க்க, குழுவினரை படம் எடுப்பது போல அந்த மூதாட்டியை படம் எடுக்கலாம் என முயற்சித்தேன்.  சில படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, திடீரென, எங்கள் குழுவினரில் ஒருவர் அவர் அருகே வரும்போது ஒரு புகைப்படம் எடுத்தேன்!

 

அந்தப் புகைப்படத்தை பார்த்தபோது பீடியை பாட்டி குடித்துக் கொண்டிருக்க, புகையோ குழுவில் இருந்தவரின் வாயிலிருந்து வருவது போல அமைந்து விட்டது! அந்தப் புகைப்படத்தைப் பார்த்து குழுவில் உள்ள அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்.

 

இது போன்று பயணங்களில் சிலரை புகைப்படம் எடுக்கத் தோன்றினாலும், அவரது முகவெட்டு புகைப்படத்தில் நன்றாக இருக்கும் என நினைத்தாலும் புகைப்படம் எடுக்க முடிவதில்லை. குழந்தைகளை படம் எடுக்க அவர்களது பெற்றோர்களிடம் அனுமதி கேட்டு எடுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இது போன்ற மூதாட்டி/பெரியவர்களை படம் எடுத்துக் கொள்ள சற்றே பிரயத்தனப் பட வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் அனுமதி பெற்றே படம் எடுக்கிறேன் என்றாலும், இப்படி மறைமுகமாக சில படங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.

 

கோவிலிலிருந்து வெளியே வந்து காலணிகளை அணிந்து கொண்டு அங்கே இருந்த கடைகளை நோட்டமிட்டபடி வந்து கொண்டிருந்தோம். தேநீர் அருந்தலாமென ஒரு கடையில் நிற்க, அவர் தேநீர் தயாரிக்கும் வரை பக்கத்துக் கடைகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம். ஒரு கடைக்காரர் மூங்கில்களைச் சீவி ஏதோ செய்து கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  மூங்கில்களில் ஹூக்கா செய்து வைத்திருந்தார். அதைக் கொண்டு புகை பிடிக்க முடியாது – ஷோவிற்காக வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.

 

பக்கத்திலேயே ஒரு சிறுமி ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நாய்க்குட்டியையும் அவரையும் புகைப்படம் எடுத்தபடியே அவருடன் பேசத் தொடங்கினோம். நாய்க்குட்டியின் பெயரைக் கேட்க, அந்தப் பெண் சொன்ன பெயர் யாருக்கும் புரியவில்லை. மீண்டுமொரு முறை கேட்க, அச் சிறுமி சொன்ன பெயர் – [B]பரவ்னி!வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று யோசித்தபடியே நாய்க்குட்டியைப் பார்க்க, வெள்ளை நிற நாய்க்குட்டியின் மேல் ஆங்காங்கே Brownதிட்டுகள்! அட, இந்த நாய்க்குட்டியின் பெயர் Brownie!

 

[B]பரவ்னியையும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, அதற்குள் தேநீரும் தயாரானது. தேநீர் அருந்திய பின் எங்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தோம். அங்கே எனது காமெராவினைப் பார்த்த இரு இளைஞர்கள் தங்களை புகைப்படம் எடுத்துக் காண்பிக்கச் சொல்ல அவர்களையும் புகைப்படம் எடுத்தேன். எத்தனை தூரம் வரை இக் கேமரா மூலம் படம் எடுக்க முடியும் என்ற கேள்வியும் கூடவே அவர்களிடமிருந்து.

 

சாலையின் எதிர் புறத்தில் ஹிமாச்சலப் பிரதேச அரசுப் பேருந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஓட்டுனரும் நடத்துனரும் வந்து நிற்க, ”அவர்களை இங்கிருந்தே புகைப்படம் எடுக்க முடியுமா?” என்று கேட்க, அவர்களையும் ஒரு புகைப்படம் எடுத்துக் காண்பித்தேன். இப்படி சில புகைப்படங்களை எடுத்தும், கூடவே பயணத்தினைத் தொடர்வதும் தொடர்ந்தது. கோவிலின் வெளியே உள்ள தகவல் பலகையில் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு சுற்றுலாத் தலம் இருப்பதாக எழுதி வைத்திருக்க, அவ்விடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று போக்குவரத்துக் காவலரிடம் விசாரித்துக் கொண்டு பயணித்தோம்.

 

அப்படி பயணித்த இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பது பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன். ஓகே!

 

தொடர்ந்து பயணிப்போம்….

License

Share This Book