22

சென்ற பகுதியில் சொன்னது போல பைஜ்நாத் சிவன் கோவில் பார்த்து விட்டு காங்க்டா திரும்பினோம். எங்களது வருகையை மனிஷுக்கு தெரிவிக்க, அவர் எங்களது தங்குமிடத்திற்கு வந்தார். மூன்று நாள் பயணத்தில் பைஜ்நாத் கோவில் வாசலில் சின்னதாய் ஒரு Purchase மட்டுமே செய்திருந்ததால், காங்க்டாவில் Shopping செய்ய ஒரு வாய்ப்பு வேண்டும் என்பது எங்களுடன் வந்திருந்தவர்களின் ஏகோபித்த குரல்!

 

காங்க்டா தேவி கோவிலுக்கும் இன்னுமொரு முறை செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. கோவிலுக்கு மீண்டும் ஒரு முறை சென்று நின்று நிதானித்து மாலை நேர ஆரத்தி பார்த்து விட்டு கடைத் தெருவிற்கு வந்தோம். குளிர் பிரதேசம் என்பதால் இங்கே குளிர் கால உடைகள் விற்கும் கடைகள் நிறையவே உண்டு. “ஜவஹர் கோட்” என்று அழைக்கப்படும் கோட் எனக்கு ஒன்று வாங்கிக் கொண்டேன்.  மற்றவர்களும் சில குளிர் கால உடைகளை வாங்கிக் கொண்டார்கள்.

 

வாங்கிய பொருட்கள் அனைத்தையும் தங்குமிடத்தில் வைத்து விட்டு இரவு உணவு உண்பதற்காக முந்தைய நாள் சாப்பிட்ட அதே இடத்திற்குச் சென்றோம். கூடவே மனிஷும் வந்திருந்தார். அறுசுவை உணவு சாப்பிடும் போதே மனிஷின் அலைபேசியில் தொடர்ந்து அழைப்பு – வீட்டிலிருந்து! வீட்டில் உறவினர்கள் இவரது வருகைக்காக காத்திருப்பதாகவும் அனைவரும் சேர்ந்து உண்ணவேண்டும் எனவும் சொல்லவே, இவர் தொடர்ந்து சில நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி எங்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்க, அவரை கட்டாயப்படுத்தி காலையில் சந்திக்கலாம் என அனுப்பி வைத்தோம்.

 

இரவு உணவு திருப்தியாக உண்டு முடித்து தங்குமிடம் வரை காலாற நடந்து வருவது ஒரு அலாதியான அனுபவம்.  அன்றைய பொழுதில் பார்த்த விஷயங்களைப் பேசியபடியே திரும்பி வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை ஆறுமணிக்கு தில்லி நோக்கி திரும்ப வேண்டும் என்பதால், உடைமைகளை சரி பார்த்து Packing செய்ய வேண்டும். அனைவரும் விரைவாகப் புறப்பட்டால் தான் இரவுக்குள் தில்லி திரும்ப முடியும்.

 

இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த அனைத்து விஷயங்களையும் இத்தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஹிமாச்சல் பிரதேசத்தில் பார்க்க வேண்டியவை நிறையவே உண்டு. தேவ் பூமி என்று சொல்லப்படும் இம்மாநிலத்தில் கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், குளிர் பிரதேசங்கள் என நிறையவே உண்டு.  நாங்கள் பார்த்த இடங்களுக்கு அருகிலேயே இருக்கும் இன்னும் சில இடங்களைப் பற்றிய சில குறிப்புகளை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

பாலம்பூர் அருகிலேயே “[Dh]தரம்ஷாலா” எனும் இடம் இருக்கிறது. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த “[Dh]தரம்ஷாலா”வில் இருக்கும் விளையாட்டு அரங்கில்  நடக்கும்போது கிரிக்கெட் ப்ரேமிகள் பார்த்திருக்கக் கூடும். மிகவும் அருமையான குளிர் வாசஸ்தலம். திபெத்திய புத்த மத குருவான [Dh]தலாய் லாமா இருக்கும் இடம் இது தான். புத்தர்களின் வழிபாட்டுத் தலங்களும் இங்கே அதிக அளவில் உண்டு. அனைத்துமே அருமையான வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும்.

 

இயற்கைக் காட்சிகளுக்கும் இங்கே குறைவில்லை. கண்கவர் காட்சிகள் நிறைந்த இவ்விடத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுக்கும் படிச் செல்வது நல்லது. வெறும் சுற்றுலாவாக அல்லாது இப்படி ஓய்வாக இருப்பதில் நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். பயணங்களில் நிறைய இடங்களைப் பார்த்து ரசிப்பது ஒரு வகை ஆனந்தம் எனில், எந்த வித வேலையும் செய்யாது, இயற்கைக் காட்சிகளை பார்த்தபடி அந்த எழிலில் மூழ்கிப் போவது மற்றொரு வகை!

 

கடல் மட்டத்திலிருந்து 1380 மீட்டர் உயரத்தில் இருக்கும் தரம்ஷாலா நகரிலிருந்து இன்னும் மேலே 1830 மீட்டர் அளவில் சென்றால் Upper Dharmshala என அழைக்கப்படும் பகுதியில் Mcleodganj, Forsytheganj எனும் இடங்கள் உண்டு. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இடங்கள் என்பதால் கலோனியல் வகைக் கட்டிடங்கள் இங்கே நிறையவே உண்டு.

 

Trekking செய்ய விருப்பமுள்ளவர்களுக்கும் இங்கே சில இடங்கள் உண்டு.  Triund எனும் இடத்தில் வருடம் முழுவதும் [பனி அதிகம் விழும் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்கள் தவிர] Trekking செய்ய முடியும்.  அனைத்து வயதினரும் இங்கே Trekking செய்வதை பார்க்க முடியும். முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை சற்றே சுலபமாகத் தெரிந்தாலும், கடைசி ஒரு கிலோ மீட்டர் தொலைவு கொஞ்சம் கடினமானது தான். நண்பர்களோடு பல வருடங்களுக்கு முன்பு இங்கே முதன் முதலாய் சென்றதுண்டு. கடைசி ஒரு கிலோ மீட்டரில் பல கொண்டை ஊசி வளைவுகள் உண்டு. அங்கே நடப்பது ஒரு சவாலான விஷயம் தான்!

 

இப்படி நிறைய இடங்கள், பார்க்க வேண்டிய இடங்கள் ஹிமாச்சல் மாநிலம் முழுவதுமே உண்டு. பொதுவாக ஷிம்லா, குலு, மணாலி போன்ற இடங்கள் தான் நிறைய பேருக்குத் தெரியும் என்றாலும், மணிகரன், டல்ஹவுசி, குஃப்ரி, [Ch]சைல், சோலன், பாலம்பூர், கசௌலி போன்ற நிறைய இடங்களும் இம்மாநிலத்தில் உண்டு. ஒவ்வொரு இடமும் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் தான். எத்தனை தான் பயணித்தாலும் அலுக்காத ஒரே விஷயம் பயணம் தானே!

 

இந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா? முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு! உங்களுக்கு?

 

தொடர்ந்து பயணிப்போம்….

License

Share This Book