3

 

Roadside Dhaba-Part-3-1

சாலையோர உணவகம்…..

கர்னால் நகரின் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஓட்டுனர் ஜோதி வண்டியை நிறுத்திய பின் இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு உணவகத்திற்குள் சென்றோம். வண்டிக்குள் இருந்த வரை குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை.  நெடுஞ்சாலையில் வெட்ட வெளியில் இருந்த உணவகத்தின் அருகே அப்படி ஒரு குளிர்ந்த காற்று. பார்க்கும் மக்கள் அனைவருமே ஒரு பெரிய மூட்டைக்குள் இருப்பது போல இருக்கிறார்கள் – எங்களையும் சேர்த்து தான்.

 

வெளியிலேயே நாற்காலிகளும் மேஜைகளும் போட்டு இருந்தாலும் கண்ணாடித் தடுப்புகள் அமைத்திருந்த உட்புறத்திற்குத் தான் அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள்.  வெளியில் அடிக்கும் குளிர்காற்றிலிருந்து தப்புவது தான் அனைவரின் குறிக்கோளாக இருந்தது.  நாங்கள் வந்திருந்த அதே சமயத்தில் பல வண்டிகள் வெளியே வந்திருந்தன.

 

அங்கே பல உணவகங்கள் வரிசையாக இருக்கும். அதில் நாங்கள் தேர்ந்தெடுத்தது ZHILMIL DHABA எனும் உணவகம். சில வருடங்களுக்கு முன்னரே ஒரு பயணத்தில் அங்கே சாப்பிட்ட அனுபவம் உண்டு. கூடவே ஜோதியும் இங்கே சாப்பிடலாம் என்று பரிந்துரைக்க அந்த உணவகத்தினைத் தேர்ந்தெடுத்தோம். பெரும்பாலும் வட இந்தியாவில் காலை உணவாக பராட்டா தான் கிடைக்கும். இங்கேயும் அதே.

 

”என்ன இருக்கு?” என்ற கேள்வியே தேவையில்லை – இருந்தாலும் கடமைக்குக் கேட்டு வைத்தோம். வரிசையாக “ஆலு பராட்டா, ப்யாஜ் பராட்டா, பனீர் பராட்டா, மூளி பராட்டா, கோபி பராட்டா, மேத்தி பராட்டா” என்று அவர் அடுக்கிக்கொண்டே போக, சிலர் ஆலு பராட்டா, சிலருக்கு ப்யாஜ் பராட்டா, சிலர் பனீர் பராட்டா எனச் சொல்லி பணியாளியைக் குழப்பி விட்டோம்.  எல்லோரும் சொல்லச் சொல்ல அவர் தலை முடியைப் பிய்த்துக் கொள்ளாத குறை!

சரி எத்தனை எத்தனை பராட்டாக்கள், என்ன வகை என்று சொல்லிய பின்னும் அவர் கைவிரல்களால் எண்ணிய படியே சென்று கொண்டிருந்தார். அதற்குள் வேறொரு பணியாள் எங்கள் அனைவருக்கும் தட்டு, டம்ளர் போன்றவற்றையும் சிறிய கண்ணாடி டம்ளரில் போட்டு வைத்திருந்த பச்சை மிளகாய்களையும் கொண்டு வைத்தார்.  கூடவே ஒவ்வொரு தட்டிலும் ஒரு ஊறுகாய் Blister Pack, Butter Paper-ல் மடித்த வெண்ணை வைத்தார்.  கூடவே எலுமிச்சை பிழிந்த முள்ளங்கி, வெங்காயம், மேலே தூவிக்கொள்ள உப்பு, மிளகுத் தூள் என வைத்து விட்டுச் சென்றார்.

 

உள்ளே இருந்து பராட்டா வருவதற்குள் வெங்காயம், முள்ளங்கி எல்லாம் காலி ஆனது! சுடச் சுட பராட்டா வர வேண்டுமே! பிறகு பராட்டா வர, ஒவ்வொருவராய் அவரவர் கேட்ட பராட்டாவினை கொடுத்திருந்த வெண்ணையை அதன் மேல் தடவி, தயிர் மற்றும் ஊறுகாய் தொட்டுக்கொண்டு ஒரு கட்டு கட்டினோம்.  ஒரு சிலர் ஒரு பராட்டாவிலேயே வயிறு நிரம்பியதாய்ச் சொல்ல, என்னைப் போல சிலர் மட்டும் இன்னும் ஒரு பராட்டா சாப்பிட்டோம் – முதலில் சாப்பிட்டது ப்யாஜ் பராட்டா, இரண்டாவதாக பாதி ஆலு பராட்டா, பாதி பனீர் பராட்டா! இரவு வரை தாங்க வேண்டுமே! ஏனெனில் பராட்டா சாப்பிடும்போதே மணி 11.45!

 

இப்படியாக அவரவர்களுக்குத் தேவையானதை சாப்பிட்டு முடித்தபின் அனைவரின் ஏகோபித்த வாக்களிப்பில் அந்த உணவகத்திற்கு நல்ல பெயர். உணவும் பிடித்திருந்தது எனச் சொல்லி விட அடுத்தது என்ன என்று கேட்க, குளிருக்கு இதமாய் ஒரு தேநீர் என்பதே அனைவரின் குரலாகவும் இருந்தது! பொதுவாகவே ஹரியானாவில் பால் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல Thick-ஆன எருமைப் பால்! தண்ணீர் கலப்பது இல்லை. அதனால் தேநீரும் நன்றாக இருக்கும். அனைவரும் தேநீர் அருந்தி அங்கிருந்து புறப்பட்டோம்.

 

இந்தப் பயணம் முழுவதும் என்னைக் கவர்ந்த விஷயம் பசுமையான வயல்வெளிகள் – பல இடங்களில் கடுகு, கரும்பு, கோதுமை எனப் பயிரிட்டு இருந்தார்கள். கூடவே பல வயல்களின் ஓரங்களில் தேக்கு மரங்கள். மரங்களை வைத்து விட்டு சில வருடங்கள் காத்திருந்தால் நல்ல சாகுபடி. பராமரிப்பு என பெரிதாய் ஒன்றுமில்லை.  சாலையில் பயணித்தபடியே பல இடங்களில் இப்படி தேக்கு மரங்களைப் பார்க்க முடிந்தது.

 

பொதுவாகவே ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர்கள் நல்ல உழைப்பாளிகள். விவசாயம் தான் அவர்களுக்கு முக்கியத் தொழில். பச்சைப் பசேலெனெ இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்த பகுதியிலும் வழியில் சந்தித்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்! ஏனெனில் நாங்கள் ஹிமாச்சலப் பிரதேசம் போய்ச் சேர்ந்தது மாலை ஏழு மணி அளவில். கிட்டத்தட்ட 12 மணி நேரப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஒரே பகுதியில் சொல்லி விட்டால் என்னாவது! 🙂

 

தொடர்ந்து பயணிப்போம்……

License

Share This Book