4

 

Jaggery preparation-Part-4-1

சுடச்சுடத் தயாராகும் வெல்லம்…..

எங்கள் பயணம் தொடர்ந்தது….. சென்ற பகுதியில் சொன்ன மாதிரி வயல்வெளி எங்கும் பச்சைப்பசேல்….  ஆங்காங்கே சில வயல்களில் கரும்பு சாகுபடி முடிந்து அவ்விடத்திலேயே வெல்லம் காய்ச்சி விற்றுக் கொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று இடங்களில் இப்படிச் சுடச்சுடக் காய்ச்சிய புதிய வெல்லம் பார்த்த பிறகு சாப்பிடாவிட்டால் என்னாவது!  ஓட்டுனர் ஜோதியிடம் வெல்லம் காய்ச்சும் அடுத்த இடம் கண்டவுடன் வண்டியை நிறுத்தச் சொன்னோம். அவருக்கும் வெல்லம் சாப்பிட ஆசை இருந்தது போலும் – நீங்கள் சொல்லத் தான் நானும் காத்திருந்தேன் என்று சொன்னபடி அடுத்த வெல்லம் காய்ச்சும் இடத்தில் வண்டியை நிறுத்தினார்.

 

அப்போது தான் சுடச்சுட வெல்லம் காய்ச்சி ஒரு பெரிய மரத் தாம்பாளத்தில் கொட்டி துண்டு போட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். அதற்கு முன்னர் காய்ச்சிய வெல்லமும் – அங்கே கூடையில் இருந்தது. கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்து அதற்குப் பின்னர் தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம். நாங்களோ பதினைந்து பேர் [ஓட்டுனர் ஜோதியையும் சேர்த்து!] – அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் ருசித்தாலே ஒரு கிலோ அளவுக்கு வருமே!

 

கொஞ்சமாக எடுத்து அனைவரும் பகிர்ந்து ருசித்தோம்.  இப்போது தான் பயணம் தொடங்கி இருப்பதால், அப்போதைக்கு சாப்பிட மட்டும் ஒரு கிலோ வெல்லம் வாங்கிக் கொண்டோம். தில்லி திரும்பும் போதும் இதே வழி தான் என்பதால் வரும்போது எல்லோருடைய வீட்டிற்கும் தேவையான வெல்லம் வாங்க முடிவு செய்தோம். கிலோ 60 ரூபாய் சொல்ல, அங்கே ஒரு மூதாட்டி பேரம் பேசிக் கொண்டிருந்தார் – ”எல்லாம் அம்பது ரூபாய்க்கு தரலாம்! எத்தனை வருஷமா வெல்லம் வாங்கறேன், எனக்குத் தெரியாதா?” என்று கேள்வி 🙂

Kinnu juice-part-4-2

தயாராகிறது கின்னு ஜூஸ்…

வெல்லம் வாங்கி ருசித்தபடியே அங்கிருந்து பயணித்தோம். சற்று தொலைவு சென்ற பிறகு பார்த்தால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் பல இடங்களில் கின்னு [ஆரஞ்சு போலவே இருக்கும்] பழங்களைக் கொட்டி வைத்து அங்கேயே அதன் சாறு பிழிந்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.  பதினோரு மணி அளவில் காலை உணவு சாப்பிட்டது – அதன் பிறகு வெல்லம் – இப்போது ஜூஸ். பார்த்தவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம். பழங்களை எடுத்து தோல் உரித்து ஜூஸ் போட்டு காலா நமக் [கருப்பு உப்பு] போட்டு கலந்து கொடுத்தார் ஒரு இளைஞர். பெரிய டம்ளரில் ஜூஸ் – விலை ரூபாய் 20 மட்டும்! அதையும் குடித்து விட்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.

 

இப்படியே சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் என்னாவது! ஆனாலும் உணவு எங்களை விடுவதாய் இல்லை! நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது வரும் ஒரு ஊர் ஆனந்த்பூர் சாஹேப் – அங்கே சின்னச் சின்னதாய் நிறைய குருத்வாராக்கள் உண்டு. முக்கியமான குருத்வாரா ஆனந்த்பூர் சாஹேப் எனும் பெயரிலேயே இருக்கிறது.  நாங்கள் சென்ற சமயத்தில் சீக்கிய குருக்களில் ஒருவரின் பிறந்த நாள் என்பதால் பஞ்சாபின் பல பகுதிகளிலிருந்தும் சீக்கியர்களும், மற்ற பஞ்சாபிகளும் ஆனந்த்பூர் சாஹேப் குருத்வாராவிற்கு தங்களது ட்ராக்டர்களில் சென்று கொண்டிருந்தார்கள்.

 

அப்படிச் செல்லும் அனைவருக்கும், மற்ற சாலைப் பயணிகளுக்கும் நெடுஞ்சாலை எங்கும் சீக்கியர்கள் சுத்தமான உணவு சமைத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள்.  சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கொஞ்சமாவது சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுப்பது அவர்கள் வழக்கம்.

 

அனைவரிடமும் பணிவாக மறுத்தாலும் சிலர் விடுவதில்லை – தேநீரும் பிரட் பக்கோடாவுமாவது எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் எனச் சொல்ல ஒரு இடத்தில் தேநீரும் பிரட் பக்கோடாவும் சாப்பிட்டோம். இப்படியாக பயணம் முழுவதிலும் விதம் விதமாய் சாப்பிட்டு, இனிமையான அனுபவங்கள் பலவற்றுடன் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தினைச் சென்றடைந்தோம்.

 

அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

 

தொடர்ந்து பயணிப்போம்……

License

Share This Book