6

 

 

முதல் நாள் இரவு சின்னமஸ்திகா தேவியை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தோம். இரவு உணவினை முடித்துக் கொண்டு நாள் முழுவதும் பயணம் செய்த அலுப்பு தீர ஒரு குளியல். பிறகு உறக்கம்.  அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன். மற்றவர்கள் அனைவரும் உறக்கத்தில் இருக்க, சரி யாரையும் தொந்தரவு செய்யாது நகர்வலம் வருவோம் என புறப்பட்டேன்.  அதிகாலையில் நடை – அதுவும் இதமான குளிரில் நடைப்பயணம் மிகவும் அலாதியான சுகம் தருவது.  நடந்து பாருங்களேன் அதன் இனிமையும் புத்துணர்ச்சியும் புரியும்.

 

முதல் நாள் கோவில் வரை வாகனத்தில் பயணம் செய்த தொலைவினை நடையில் கடந்தேன். ஆங்காங்கே சில கடைகள் திறந்திருந்தன. அவற்றில் ஒன்றில் தேநீர் அருந்தி, மேலும் நடந்தேன். காலையிலேயே சில பக்தர்கள் கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். கவலைகளை மறக்க, தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பவர்கள் போலும். நான் காலைக் காட்சிகளை ரசித்தபடியே திரும்பினேன். சில மணித்துளிகள் கடந்த பின்னும் தங்கும் விடுதி உறக்கத்திலேயே இருந்தது!

 

சரி இன்னும் கொஞ்சம் நடப்போம் என எதிர்புறத்தில் நடையைத் தொடங்கினேன்.  சிறிதளவு தொலைவு கடந்தபின் ஒரு பெண்மணி எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்தார். கையிலே ஒரு குச்சி. குளிருக்கான உடைகள் அணிந்திருந்தாலும் அனைத்தும் தோய்த்துப் பலகாலம் ஆனது தெரிந்தது. எனக்கருகே வந்ததும் குச்சியை வேகமாக ஆட்டியபடி “என்னைப் பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா? நான் பைத்தியம் இல்லை – என்னைத் தவிர மற்ற அனைவரும் பைத்தியம் தான்” என்று சொல்லி திட்டிக் கொண்டே கடந்தார்.

 

நடந்து கொண்டிருந்தாலும் அவர் அருகே வந்து சொன்னதைக் கேட்டபோது ஒரு நிமிடத்திற்கு மேல் அந்த இடத்திலேயே நின்று விட்டேன். நடக்க முடியவில்லை. சூழ்நிலை அவரை இப்படித் தள்ளியிருக்க, அவர் என்ன செய்வார் பாவம். சுதாரித்துக் கொண்டு மேலும் நடந்தேன்.

 

முந்தைய தினம் வாகனத்தில் வரும்போது ஒரு இடத்தில் வானம் வண்ணமயமாய்க் காட்சி அளித்தது ஒரு இடத்தில் – அதே இடத்தில் நின்று காலை நேர வானத்தினை நோக்கியபடி நின்று சில புகைப்படங்களை எடுத்தேன்.  மீண்டும் தங்குமிடம் நோக்கி திரும்பினேன். வழியில் மீண்டும் அந்தப் பெண்மணி. வேறு யாரையோ திட்டியபடியே நடந்து கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ….  சிந்தபூர்ணியில் குடிகொண்டிருக்கும் சின்னமஸ்திகா தேவி அப்பெண்மணியின் கவலைகளை எப்போது தீர்ப்பாரோ?

 

காலையில் மேலும் சில கடைகள் திறந்து அன்றைய வியாபாரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தங்குமிடம் திரும்ப, ஒவ்வொருவரும் அன்றைய தினத்திற்கான அனுபவங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் சென்று தயாரானேன். காலை உணவினை முடித்துக் கொண்டு கோவில் செல்ல உத்தேசம்.  அதற்கு முன்னர், சென்ற பகுதியில் சொன்ன வரலாறு பற்றி பார்த்து விடுவோமா?

 

மார்க்கண்டேய புராணத்தில் வரும் ஒரு கதை இது. சண்டி தேவி உக்கிரமான போரில் பல அசுரர்களை அழித்தார். அதற்குப் பின்னரும் அவரது யோகினி வடிவங்களில் இரண்டான ஜெய, விஜய ஆகிய இருவருக்கும் தாகம் அடங்கவில்லை. இன்னும் இரத்தம் வேண்டித் துடிக்க, சண்டி தேவி தனது தலையைத் துண்டித்து, ஒரு பக்கத்தில் இரத்தம் குடிக்க, ஜெய, விஜய ஆகிய இருவரும் வேறு ஒரு பக்கத்தில் இரத்தம் குடித்து தங்களது தாகத்தினை போக்கிக் கொண்டதாக கதை.

 

சின்னமஸ்திகா தேவியை மனதாரத் துதிக்கும் பக்தர்கள் தங்கள் கட்டுகளிலிருந்து விடுபட்டு பூரண முக்தியடைவார்கள் என்று காட்டவே இப்படி ஒரு கதை இருக்கலாம். எது எப்படியோ, ஒவ்வொரு கோவிலுக்கும் சில வரலாறுகள் – நம்பக் கூடியவையா இல்லையா என்பதை அவரவர் முடிவுக்கு விட்டு விடுகிறேன்!

 

நீங்கள் படித்து முடிப்பதற்குள் நானும் தயாராகி விட்டேன். இந்தப் பயணத்திற்கான முக்கிய காரணமே சிந்தபூர்ணியில் நடக்க இருந்த ஒரு பூஜை தான் – தில்லியில் இருக்கும் ஒரு சபை சிந்த்பூர்ணியில் 108 பெண்கள் சேர்ந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு எங்கள் பகுதியிலிருந்து சிலரும் செல்ல, அதைச் சாக்கிட்டு நாங்கள் அனைவரும் பயணித்தோம். அதற்காக அனைவரும் புறப்பட்டு கோவிலை நோக்கி நடந்தோம்.

 

அன்று பகல் பொழுது முழுவதுமே கோவிலில் தான் எங்களுக்கு வாசம். அங்கே கிடைத்த அனுபவங்கள், வேறு சில விஷயங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

 

தொடர்ந்து பயணிப்போம்……

License

Share This Book